"அமரன்" முகுந்த் வரதராஜன் மட்டும் தியாகி அல்ல! மனைவி இந்துவும்தான்! மேஜரின் தந்தை சொன்ன கண்ணீர் கதை
சென்னை: என் மருமகளை இன்னொரு திருமணம் செய்து கொள்ள சொன்ன போது அவர் கூறியது என்ன என்பது குறித்து முகுந்த் வரதராஜனின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷ்னல் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் அமரன். இது தீபாவளிக்கு ரிலீசானது. இந்த படம் நல்ல வசூலை அடைந்துள்ளது.

படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த படம் உண்மையில் நடந்த கதை. ஆம்! 2014 ஆம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் தனது உயிரை தியாகம் செய்தவர் மேஜர் முகுந்த் வரதராஜன். இவருடைய வாழ்க்கையை மையமாக வைத்தே இந்த படத்தின் கதை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை முகுந்தின் மனைவி இந்து, முகுந்தின் தாய் தந்தை உள்ளிட்டோர் பார்வையிட்டனர். படம் நன்றாக உள்ளதாக தெரிவித்தனர். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஒன்று சாய் பல்லவியின் கதாபாத்திரம். அதாவது மேஜர் முகுந்த் மனைவி இந்து ரெபக்கா வர்கீஸின் கதாபாத்திரத்தை சாய் பல்லவி ஏற்று நடித்தார்.
அவரை இந்த படத்தில் கிறிஸ்துவராகவே காட்டியிருந்தனர். ஆனால் முகுந்த் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது சொந்த அடையாளத்தை இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு காட்டவில்லை என்ற ஒரு சர்ச்சை உண்டு. இதை கமல்ஹாசன்தான் விளக்க வேண்டும்.
எல்லாவற்றையும் தாண்டி இந்த படம் கண்ணீரை வரவழைக்கிறது. வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முகுந்தின் தந்தை வரதராஜன் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறுகையில், "எனது மருமகள் இந்து ரொம்ப பாவம். அவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள வைக்க வேண்டும் என விரும்பினேன்.
இதற்காக இந்துவின் அப்பாவிடம் போய், "சார் இந்துவுக்கு 31 வயதுதான் ஆகிறது. எனவே அவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைங்க" என்றேன். அப்போது அங்கிருந்த இந்து, என்னிடம், "அப்பா நான் இன்னொரு திருமணம் செய்து கொள்வேன்னு நீங்கள் நினைக்கிறீங்களா, நோ" என்றாள்.
எனக்கு வருத்தம் இருந்தாலும் என் மருமகளை நினைத்து பெருமையாக இருந்தது என்றார். முகுந்த் நாட்டுக்காக தியாகம் செய்து தனது உயிரை நீத்தார். அவருடைய மனைவி இந்துவோ தனது வாழ்க்கையே முகுந்திற்காக தியாகம் செய்து இரண்டாம் திருமணம் செய்ய மாட்டேன் என கூறியிருக்கிறார்.
முகுந்த் வரதராஜனின் குடும்பம் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். அதுவே முகுந்த்தை ராணுவத்தில் சேர தூண்டியது. முகுந்த் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயாவில் வணிகவியல் இளங்கலைப் பட்டத்தையும் தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் இதழியலில் டிப்ளமோவும் படித்துள்ளார்.
இவர் ஆபிசர்ஸ் டிரெயினிங் அகாடெமியின் மாணவர். கடந்த 2006ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த இவருக்கு லெப்டினன்ட் பதவி வழங்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு கேப்டனாக பதவி உயர்வு பெற்றார். 2012 ஆம் ஆண்டு மேஜராகவும் பதவி உயர்வு பெற்றார்.
அதன்பின்னர் 2012 ஆம் ஆண்டு 44ஆவது பட்டாலியனுக்கு அனுப்பப்பட்டு ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் நியமிக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டு ஒரு கிராமத்தில் தீவிரவாதிகள் இருப்பதை அறிந்த முகுந்த் அந்த கிராமத்தை சுற்றி வளைத்தார். அப்போது முக்கிய தீவிரவாதிகளை துப்பாக்கியால் சுட்ட மேஜர், எதிர்பாராதவிதமாக தீவிரவாதிகளின் குண்டு பாய்ந்ததில் அவர் வீரமரணம் அடைந்தார்.
முகுந்த்தை கொன்றவர்களில் ஒருவன் அல்தப் வாணி என்ற தீவிரவாத கும்பலின் தளபதியாவான். முகுந்த் மட்டும் அந்த ஆபரேஷனை செய்யவில்லை எனில், தீவிரவாதிகள் நம் நாட்டில் நாசவேலைகளை செய்திருக்கக் கூடும். துப்பாக்கி சூட்டால் முதலில் காயமடைந்த முகுந்த், உடனடியாக அங்கிருந்து வெளியேறிருந்தால் அவர் காயங்களுடன் உயிர் பிழைத்திருப்பார். ஆனால் முன் வைத்த காலை பின் வைக்கக் கூடாது, இதில் நம் உயிரே போனாலும் தீவிரவாத ஆபரேஷனை முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் முகுந்த் மேலும் மேலும் தீவிரவாதிகள் தங்கியிருந்த இடத்திற்கு முன்னேறி சென்றார். இவரது வீர தீர செயல்களை பாராட்டி அவருடைய இறப்பிற்கு பிறகு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது. அந்த விருதை அவருடைய மனைவி இந்து முகுந்த் பெற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications