ரூ 21,000 கோடி ஹெராயின் கடத்தல் வழக்கு.. சென்னையில் உள்ள ஆந்திர தம்பதி வீட்டில் என்ஐஏ அதிரடி ரெய்டு
சென்னை: குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் போதைப் பொருள் கடத்த முயன்ற வழக்கில் ஆந்திராவை சேர்ந்த சுதாகரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், போரூர் அடுத்த கொளப்பாக்கத்தை அடுத்துள்ள இந்த ஆந்திர தம்பதிக்குச் சொந்தமான வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாகக் குஜராத் முந்த்ரா துறைமுகத்திற்கு வந்த கண்டெய்னரில் சுமார் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளைப் போதை தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறி போரூர் அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுதாகர் மற்றும் அவரது மனைவி ஆகிய 2 பேரைக் குஜராத் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த விவகாரத்தில், பல நாடுகளின் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதால் இந்த வழக்கானது என்.ஐ.ஏ. பிரிவுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது
இந்தச் சூழலில் டெல்லி மற்றும் கேரளாவில் இருந்து வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் இன்று காலை போரூர் அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள ஆந்திரா தம்பதியினர் வீட்டில் தீவிர சோதனை செய்தனர்.
கேரள மாநில பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்த என்ஐஏ அதிகாரிகள் தம்பதியின் வீடு மற்றும் அவர்களுக்குச் சொந்தமான வாகனங்களில் இந்த வழக்கு சம்பந்தமான ஆதாரங்கள் ஏதாவது உள்ளதா எனச் சோதனை செய்து வருகின்றனர். அவர்களுக்குச் சொந்தமான கணினி, வங்கிக் கணக்குகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன், மச்சாவரம் சுதாகரின் வீட்டில் போதை தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்தனர். இந்த வழக்கு தற்போது மீண்டும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வசம் சென்றுள்ளதால், என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் அவரது வீட்டில் சோதனை செய்து வருவது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்.ஐ.ஏ. அதிகாரிகளின் விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், வரும் நாட்களில் இந்த வழக்கு குறித்துப் பல முக்கிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications