முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்... சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏவாக உறுதி மொழி
முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தமிழக சட்டசபையில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று கூறி எம்எல்ஏவாக பதவியேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
சென்னை : சட்டசபையில் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின், மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று கூறிய போது அனைவரும் கரவொலி எழுப்பி வரவேற்பு தெரிவித்தனர்.
Recommended Video
16ஆவது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது.
அரங்கிற்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சட்டசபை செயலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
கொளத்தூர் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க ஸ்டாலின் எம்எல்ஏவாக முதலில் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு உறுதிமொழி செய்துவைத்தார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்... என்று கூறி முதல்வர் மு.க ஸ்டாலின் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி
அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும், முன்னாள் அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் உறுதி மொழி ஏற்று வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி பதவியேற்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்.

அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு
இதனைத் தொடர்ந்து அகர வரிசைப்படி எம்எல்ஏக்கள் வரிசையாக பதவியேற்றுக்கொண்டனர். திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் உளமாற உறுதி மொழிகிறேன் என்று கூறி பதவியேற்றுக்கொண்டனர்.

முதல்வராக பதவியேற்ற போது
கடந்த வாரம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பன்வாரிலால் புரோஹித், ஐ எம்.கே.ஸ்டாலின் என்று ஆங்கிலத்தில் வாசித்த உடன், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று தொடங்கி பதவியேற்பு உறுதிமொழியை வாசித்தார் மு.க ஸ்டாலின். திராவிட இயக்கத் தலைவர்களுக்கே உரிய முறையில் உளமாற உறுதி மொழிகிறேன் என்று கூறி பொறுப்பேற்றார். இன்றைய தினம் அதே போல கூறி பதவியேற்ற உடன் சட்டசபையில் உறுப்பினர் வரவேற்பு தெரிவித்தனர்.

சபாநாயகர், துணை சபாநாயகர்
சபாநாயகர் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் அப்பாவு மனு தாக்கல் செய்துள்ளார். கு. பிச்சாண்டி துணை சபாநாயராக மனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்பதால் நாளை நடைபெறும் கூட்டத்தில் சபாநாயகராக அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். கு.பிச்சாண்டி துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.












Click it and Unblock the Notifications