சுவாதியும் என் மகள் மாதிரிதான்.. முதல்வர் ஸ்டாலின் உண்மையை கொண்டு வரணும்- ராம்குமார் அப்பா கண்ணீர்
சென்னை: ராம்குமார் மரணம் குறித்த உண்மையை முதல்வர் ஸ்டாலின்தான் வெளியே கொண்டு வர வேண்டும் என்று ராம் குமாரின் அப்பா பரமசிவம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ல் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். காலையில் மக்கள் கூட்டம் நிறைந்த ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த கொலை தமிழ்நாட்டையே உலுக்கியது. ஒருதலைக் காதல் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதை பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கொலையை செய்ததாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். சிசிடிவி காட்சியில் நீல கட்டம் போட்ட சட்டை அணிந்து இருந்தது இவர்தான் என்று கூறி செங்கோட்டைக்கு அருகே மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த ராம் குமார் கைது செய்யப்பட்டார். போலீசார் இவரை கைது செய்யும் இவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது.

பிளேடு
இவர் அப்போது கழுத்தில் பிளேடால் அறுத்துக்கொண்டதாக போலீசார் தரப்பு தெரிவித்தது. இதனால் ராம் குமார் ஒருவார்த்தை கூட பொதுவில் பேசவில்லை. அதன்பின் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம் குமார் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டிருந்த ராம்குமார் புழல் சிறைச்சாலையில் 2016 செப்டம்பர் மாதம் 17ம் தேதி மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

மரணம் மர்மம்
ஆனாலும் இவரின் மரணத்தில் நிறைய மர்மங்கள் நிலவுகின்றன. சுவாதி மரணத்திலும் நிறைய மர்மங்கள் நிலவுகின்றன. இந்த நிலையில்தான் ஊடகம் (புதியதலைமுறை) ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராம் குமாரின் மரணத்திற்கு திமுக ஆட்சியிலாவது நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன் ராம் குமாரின் அப்பா பரமசிவம் தெரிவித்துள்ளார்.

ராம்குமார் அப்பா
அதில், காவல்துறை இதில் உண்மையை மறைகிறது. அரசும் காவல்துறையும் சேர்ந்துதான் என் மகனை கொன்றுவிட்டனர். இதில் டாக்டர்கள் உண்மையை இப்போது வெளியே கொண்டு வந்துள்ளனர். டாக்டர்கள் இதில் பொய் சொல்ல அவசியமே இல்லை. இதன் மூலம் இது கொலைதான் தற்கொலை கிடையாது என்பது உறுதியாகி உள்ளது. அதிமுக ஆட்சியில் பல முறை கோரிக்கை வைத்தோம். ஆனால் அப்போதெல்லாம் விசாரணை நடக்கவில்லை.

ஸ்டாலின்
இப்போது திமுக ஆட்சி நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் உண்மையை கண்டிப்பாக வெளியே கொண்டு வருவார் என்று நம்புகிறேன். இப்போதுதான் மனித உரிமை ஆணையத்தில் மருத்துவர்கள் உண்மையை சொல்லி இருக்கிறார்கள். எங்களுக்கு இப்போதுதான் விடை கிடைத்து இருக்கிறது. முந்தைய ஆட்சியில் நாங்கள் தாழ்த்தப்பட்ட சாதி என்பதால் எங்களை கண்டுகொள்ளவில்லை.

சுவாதி
சுவாதியை என் மகன் கொலை செய்யவில்லை. என் மகன் ராம் குமார் நிரபராதி. அதை வெளி உலகிற்கு கொண்டு வர வேண்டும். சுவாதியும் எனக்கும் மகள் மாதிரிதான். அவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். அவரை கொன்றது யார் என்று உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும். என் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது . ராம் குமார் தனது தங்கச்சி மீது பாசமாக இருந்தான், இப்போது அவளுக்கு ராம் குமார் ஆண் குழந்தையாக வந்து பிறந்து இருக்கிறான் என்று ராம் குமார் அப்பா பரமசிவம் தெரிவித்துள்ளார்.

பாசம்
மனித உரிமைகள் ஆணையத்தில் ராம்குமார் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கொடுத்த அறிக்கை தற்போது ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இதில் ராம்குமார் மின்சாரம் தாக்கி உயிர் இழந்ததற்கான ஆதாரம் இல்லை என்று கூறப்பட்டு இருக்கிறது. உடலில் மின்சாரம் பாய்ந்த ஆதாரம் இல்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். முதல்முறையாக இந்த வழக்கில் இதனால் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிக்கையில் இந்த மரணம் தொடர்பாக விசாரணை செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications