Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்துக்கு 5 தலைநகர்.. சென்னை – திருச்சி - கோவை - மதுரை -குமரிக்கு இடம் - நாம் தமிழர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்திற்கு சென்னை உள்பட 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும். திருச்சி தான் நிர்வாக தலைநகராக மாற்றப்பட்டு அங்கு தான் தலைமை செயலகம், சட்டசபை உள்ளிட்டவை செயல்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தலைநகர் பட்டியலில் சென்னை, கோவை, கன்னியாகுமரி, மதுரையின் பெயர்களும் உள்ளன. எந்தெந்த இடங்கள் எப்படி செயல்படும்? என்பது பற்றி தேர்தல் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

naam-tamilar-election-manifesto-tamil-nadu-will-gets-5-capitals-including-chennai-and-trichy-says

வரும் சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களமிறங்குகிறது. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். 117 ஆண்கள், 117 பெண்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இன்று நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

49 தலைப்புகளில் அறிவிப்புகள்

மொத்தம் 49 தலைப்புகளில் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டு இருந்தன. இதில் முதல் அறிவிப்பாக தமிழகத்துக்கு 5 தலைநகரம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 'தலைநகரை மாற்றுவோம்.. தமிழகத்தை மாற்றுவோம்' என்ற தலைப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதில், சென்னை, திருச்சி, கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்டவை தலைநகரங்களாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் சிக்கல்

''சென்னை மட்டுமே தலைநகராக இருப்பதால் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது. இவை அனைத்தையும் தேடி மக்கள் சிற்றூர்களில் இருந்து நகரத்தை நோக்கி வருவதால் சென்னை பிதுங்கி வழிகிறது.

உயிரைச் சுமந்து செல்கிற அவசர ஊர்தி கூடச் சரியான நேரத்திற்குச் செல்லமுடியாத நிலை உள்ளது. இதே நிலை நீடித்தால் சென்னையின் நிலை மேலும் சிக்கலாகும். அதனால் நிருவாக வசதிக்காக, கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி உட்பட அனைத்தும் பரவலாகச் சென்றடைய, நாம் தமிழர் அரசு தலைநகரை பரவலாக்கும்.

இப்படியாக பல தலைநகரங்கள் மற்றும் பரவலாக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட பல்வேறு நாடுகள் உலகம் முழுவதும் உள்ளன. இந்த முறையானது எளிமையான நிர்வாக மேம்பாட்டிற்கும், சீரான வளர்ச்சிக்கும் வழிவகை செய்கிறது. நாம் தமிழர் அரசும் இதே முறையை செயல்படுத்தும்.

திருச்சி

திருச்சி தமிழ்நாட்டின் நிர்வாகத் தலைநகரம் (The Administrative Capital) தமிழகத்தின் மையப்புள்ளியான திருச்சி முதன்மை நிர்வாக மையமாகச் செயல்படும். தென் மாவட்ட மக்களும், வட மாவட்ட மக்களும் ஒரே நாளில் வந்து செல்லக்கூடிய மையமாக இது இருக்கும்.

தலைமைச் செயலகம் (Secretariat), முதலமைச்சர் அலுவலகம் மற்றும் அனைத்துத் துறை அமைச்சகங்கள். இங்கு செயல்படும். மாநிலத்தின் சட்டமியற்றும் பணிகள், வருவாய்த்துறை மற்றும் பொது நிர்வாகத்தின் கீழ் மாநிலத்தின் 38 மாவட்டங்களையும் கண்காணிக்கும் மையம், மாநிலத் திட்டக் குழு உள்ளிட்டவை திருச்சியில் செயல்படும்.

சென்னை

சென்னை தொழில்நுட்பத் தலைநகரமாக (Tech Capital) இருக்கும். இந்தியாவின் மும்பை, சீனாவின் ஷாங்காய் போல, சென்னை தனது நிர்வாக பளுவைக் குறைத்துக் கொண்டு, கல்வி, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் நுழைவாயிலாக இருக்கும்.

இங்கிருந்து தகவல் தொழில்நுட்பம் துறையில் கணினித் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் ஏற்றுமதி. மேற்கொள்ளப்படும். திரைக்கலை மற்றும் ஊடகத்தின் கீழ் கலை மற்றும் பொழுதுபோக்குத் துறையின் தலைமையகமாக சென்னை இருக்கும்.
துறைமுகம் மற்றும் கடல்சார் வணிகம், வங்கிச் சேவைகள் உள்ளிட்டவை இங்கிருந்து மேற்கொள்ளப்படும்.

கோயம்புத்தூர்

கோவை தொழில் மற்றும் வணிகத் தலைநகரம் (Industrial & Business Capital) ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட் அல்லது இத்தாலியின் மிலன் நகரம் போல, கோவை - மாநிலத்தின் உற்பத்தித் துறையின் முதுகெலும்பாகச் செயல்படும். மேற்கு மண்டலத்தின் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும், சிறுகுறு தொழில்களை (MSME) உலகத் தரத்திற்கு உயர்த்தவும் இது உதவும்.

தொழில் மற்றும் வர்த்தகத்துறை, தொழிற்பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்டவை இங்கு செயல்படும்.

மதுரை

மதுரை மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகரம் (Cultural & Heritage Capital)
ஜப்பானின் கியோட்டோ நகரம் அதன் பண்பாட்டினைப் பிரதிபலிப்பது போல, மதுரையும் தமிழின் அடையாளம் மற்றும் நீதிக்கான மையமாகத் திகழும்.

தமிழர்களின் தொன்மையான வரலாறு மற்றும் கலைகளைப் பாதுகாக்கும் உலகளாவிய மையமாக இது விளங்கும். தமிழ் வளர்ச்சித் துறை, சுற்றுலா மற்றும் பாரம்பரியம், நாட்டுப்புறக் கலைகள் மற்றும் நுண்கலைகளின் பாதுகாப்பு உள்ளிட்டவை மதுரையை மையப்படுத்தி செயல்படும்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி தமிழர் மெய்யியல் தலைநகரம் (Epistemological Capital) இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள குமரி, மாநிலத்தின் தொலைநோக்குச் சிந்தனை மற்றும் இயற்கை வளப் பாதுகாப்பிற்கான மையமாக இருக்கும். தமிழரின் மெய்யியல் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கும் ஒரு அடையாளப் புள்ளியாக இது விளங்கும்.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், கடல்சார் சுற்றுச்சூழல் மற்றும் கடற்கரை மேலாண்மை, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையின் கீழ் புலம்பெயர்ந்த தமிழர்களுடனான உறவை மேம்படுத்துதல், சிந்தனை மற்றும் தத்துவ மையம் - வள்ளுவம் உள்ளிட்ட தமிழர் அறநெறிகளை உலகிற்குக் கொண்டு சேர்த்தல் உள்ளிட்டவை கன்னியாகுமரியை மையப்படுத்தி செயல்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+