Oneindia Special: லீக்கான ஆடியோ.. திமுகவுக்கு செல்லும் நத்தம் சிவசங்கரன்? கடுகடுப்பில் காளியம்மாள்?
சென்னை: நடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகிகளான காளியம்மாள், நத்தம் சிவசங்கரன் குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியானது. இந்த நிலையில் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் காளியம்மாளும், நத்தம் சிவசங்கரனும் வேறு கட்சிக்கு செல்ல இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. உண்மை என்ன என்பது குறித்து நத்தம் சிவசங்கரனிடமே நாம் பேசினோம்..
கடந்த சில நாட்களாகவே நாம் தமிழர் கட்சியில் ஆடியோ அரசியல் புயலை கிளப்பி இருக்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் அதன் உண்மை தன்மை குறித்து ஆராயாமல் விட்டால் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்து என்பதை தமிழ்நாடு அரசியல் ஏற்கனவே பார்த்து இருக்கிறது.

அமைச்சர் ஒருவர் பேசியதாக ஆடியோ வெளியாகி, அவர் துறை மாற்றப்பட்டது. பாஜகவிலும் பல்வேறு ஆடியோக்களும் வீடியோக்களும் வெளியாகி பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல் கட்சியினரின் தனிப்பட்ட உரையாடல்களை ஒட்டு கேட்பதாகவும், அவற்றை பொதுவெளியில் வெளியிடுவதாகவும் நாம் தமிழர் கட்சியினர் புகார் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியும் சிக்கியது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒழுங்கினைப்பாளரான சீமான் கட்சியின் முன்னணி நிர்வாகிகளான காளியம்மாள், கொள்கை பரப்பு செயலாளர் நத்தம் சிவசங்கரன் குறித்து பேசிய ஆடியோ வெளியானது. சீமானா இப்படி பேசுகிறார் என விமர்சனங்களும் எழுந்தது. அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவரை கைது செய்த போது அவரது மொபைலில் இருந்த ஆடியோ வீடியோ உள்ளிட்டவற்றை காவல்துறையினர் எடுத்து வைத்துக்கொண்டு லீக் செய்ததாகவும் கூறப்பட்டது.
மற்றொருபுறம் அது சீமான் பேசியது அல்ல என சிலர் கூறினாலும் இந்த விவகாரம், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே நாம் தமிழர் கட்சியிலிருந்து ஏற்கனவே அதிமுகவுக்கு சென்ற கல்யாணசுந்தரத்திடம் காளியம்மாளும், திமுகவுக்குச் சென்ற ராஜீவ் காந்தியிடம் நத்தம் சிவசங்கரும் பேசி வருவதாகவும், இருவரும் விரைவில் அவர்கள் அந்த கட்சிகளில் இணைவார்கள் என கூறப்பட்டது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் நத்தம் சிவசங்கரன் திமுகவுக்கு செல்ல இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இது தொடர்பாக ஒன்இந்தியா சார்பில் அவரிடமே பேசினோம்.. அப்போது பல தகவல்களை 'நாம் தமிழர்' சிவசங்கரன் நம்முடன் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக தான் திமுகவுக்கு செல்கிறேன் என்ற தகவல் மிக தவறானது என அழுத்தம் திருத்தமாய் கூறியிருக்கிறார். நாம் தமிழர் கட்சியில் தான் இணைய அடிப்படை காரணமே இலங்கையில் நடந்த இனப்படுகொலை தான்..

தொப்புள் கொடி உறவுகள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட போது நாம் தமிழர் கட்சி உதயமாகி, தற்போது வரை குரல் கொடுத்து வருகிறது. அதன் காரணமாக தான் தற்போது வரை நான் அதில் பயணித்து வருகிறேன். இனப்படுகொலை நடக்க முக்கிய முகங்களாக செயல்பட்டது காங்கிரசும், கருணாநிதியும் தான். இனப் படுகொலைக்கு உதவியதாக ஒரு செல்போன் நிறுவனத்தின் சிம்மை கூட நான் வாங்காமல் இருந்திருக்கிறேன்.. ஆனால் நான் இருப்பது கிராமம் அங்கு ஒழுங்காக டவர் கூட கிடைக்காது.. ஆனாலும் அந்த நிறுவனத்தின் சிம் கார்டை வாங்கக்கூடாது என்பதில் இன்னமும் நான் உறுதியாக இருக்கிறேன்.
அந்த அளவுக்கு இனப்படுகொலை என்னை பாதித்தது. எப்போதும் அந்த மக்களுக்கு தோள் கொடுக்கவே நான் நினைக்கிறேன். வகையில் நாம் தமிழர் கட்சியில் தான் நான் பயணிப்பேன் அல்லது ஒரு சிறிய அமைப்பை ஏற்படுத்தி தேர்தல் அரசியலில் நாம் தமிழர் கட்சிக்கு உறுதுணையாக இருப்பேன். மற்றபடி திமுகவுக்கோ காங்கிரஸ்கோ பாஜகவுக்கு நான் செல்ல மாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளேன்.
தற்போது கூட கனிமவள கொள்ளைக்கு எதிராக நத்தத்தில் நான் தீவிரமாக போராடி வருகிறேன். ஒருவேளை நான் திமுகவிலோ வேறு கட்சியிலோ சேர்ந்தால் நத்தத்தில் இருக்கும் 25 கோடிஸ்வரர்களில் 26 ஆவது கோடிஸ்வரராக என்னால் இணைய முடியும். ஆனால் அது எனக்கு தேவையில்லை. எப்போதும் மக்கள் சார்ந்த மண் சார்ந்த அரசியல் தான் என் திட்டம். அந்த வகையில் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் சேர போவதாக வரும் செய்திகள் முழுக்க முழுக்க பொய் தான். ஆனால் எனக்கு மனக்கசப்பு இருப்பதும் உண்மை தான்" என முடித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications