சைலண்ட்டாக அரசியல் சுற்று பயணத்தை தொடங்கிய நாம் தமிழர் கட்சி சீமான் மனைவி "அண்ணி" கயல்விழி!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் வருங்கால பொதுச்செயலாளர் என கருதப்படும் கயல்விழி சீமானின் தமது அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்கி இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற தலைமை அலுவலகத்தை கயல்விழி சீமான் திறந்து வைத்தார்.
தமிழ்த் தேசிய அரசியலை வென்றெடுப்போம் என்ற முழக்கத்துடன் உருவாக்கப்பட்டது நாம் தமிழர் கட்சி. தேர்தல் அரசியலில் பங்கேற்று மாநில அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலம் தமிழ் தேசிய அரசியலை வென்றெடுக்க முடியும் என்பது சீமானின் நாம் தமிழர் கட்சி நிலைப்பாடு. ஆனால் தமிழ் தேசியம் என்பது வேறு; அது தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பது பெரியாரிஸ்டுகளின் நிலைப்பாடு.

நாம் தமிழரின் தேர்தல் அரசியல்: தேர்தல் அரசியலில் பங்கேற்று வரும் நாம் தமிழர் கட்சி அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து தோல்வியைத்தான் தழுவுகிறது. அதே நேரத்தில் தங்களுக்கு வாக்கு சதவீதம் அதிகரித்து வருவதாகவும் சொல்கிறது நாம் தமிழர் கட்சி. அனைத்து சட்டசபை தொகுதிகள், அனைத்து லோக்சபா தொகுதிகளில் தொடர்ந்து போட்டியிடுவதால் இயல்பாகவே எந்த ஒரு கட்சிக்குமே வாக்கு சதவீதம் அதிகரிக்கவே செய்யும். ஆனாலும் வாக்கு சதவீதம் கூடி வருகிறது; அதிகாரம் நெருங்கி வந்துவிட்டது என்பது நாம் தமிழர் கட்சியின் மேடை பேச்சுகள்.

நாம் தமிழர் கட்சி பொதுச்செயலாளர்?: வாரிசு அரசியலை மிக கடுமையாக விமர்சித்து பேசி வரும் சீமான், அண்மை காலமாக மனைவி கயல்விழி சீமானை முன்னிறுத்தவும் தொடங்கி இருக்கிறார். நாம் தமிழர் கட்சியால் 'அண்ணி' என அழைக்கப்படும் கயல்விழி சீமான் அக்கட்சியின் பொதுச் செயலாளராக விரைவிலேயே அறிவிக்கப்படுவார் என கூறப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்ற போராட்டம், கயல்விழி தலைமையில்தான் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி பொதுக்குழுவிலும் கயல்விழிக்கு முக்கியத்துவம் தரப்பட்டு முன்வரிசையில் அமர வைக்கப்பட்டார்.

கயல்விழி சீமான் அரசியல் பயணம்: இந்த பின்னணியில் அரசியல் சுற்றுப் பயணத்தை அமைதியாக தொடங்கிவிட்டார் கயல்விழி சீமான். கடந்த 21-ந் தேதி நாம் தமிழர் கட்சியின் திருப்போரூர் சட்டசபை தொகுதி அலுவலகத்தை கயல்விழி சீமான் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் கயல்விழி சீமான் பயணத்தை தொடருவார் என்கின்றன நாம் தமிழர் கட்சி வட்டாரங்கள். அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் தொடக்க கால "தம்பிகள்" பலரும் தொடர்ந்தும் அதுவும் சீமானுக்கு வலதும் இடதுமாக இருந்தவர்கள் அண்மை காலமாக அடுத்தடுத்து அக்கட்சியில் இருந்து விலகி சீமானை விமர்சித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications