நீங்களே அரசியலைவிட்டு போனால் எளிய பெண்கள் என்ன செய்வார்கள்?காயத்ரி ரகுராமுக்கு சீமான் ஆறுதல் கடிதம்!
நடிகை காயத்ரி ரகுராம் அரசியலைவிட்டு போக கூடாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுரை வழங்கி உள்ளார்.
சென்னை: பாஜகவில் இருந்து வெளியேறிய நடிகை காயத்ரி ரகுராமுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். இக்கடிதத்தை நடிகை காயத்ரி ரகுராம் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், துணிந்து அரசியலுக்கு வந்த, கலைத்துறை உள்ளிட்ட சிறப்பு அடையாளம் பெற்ற உங்களைப் போன்ற சில பெண்களே சோர்வுற்று, துவண்டு வெளியேறிவிட்டால் பிறகு எளிய பின்னணி கொன்ட பெண்கள் எப்படி அரசியலுக்கு வரத் துணிவார்கள்? என சீமான் கூறியுள்ளார்.
பாஜகவில் இருந்து வெளியேறிய நடிகை காயத்ரி ரகுராம் தமக்கு 18-01-203 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அனுப்பியதாக வெளியிட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

காயத்ரி ரகுராம் அவர்களுக்கு...
அரசியலில் வாழ்வில் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள் குறித்து நீங்கள் எழுதிய கடிதத்தை கண்டேன். அரசியல் வாழ்வில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள மனக்காயத்தையும், வலியையும் என்னால் உணர முடிகிறது. ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் பெண்கள் அரசியலுக்கு வருவது என்பதே அரிது. அதையும் மீறி பல்வேறு தடைகளைத் தாண்டி அரசியலுக்கு வரும் ஒன்றிரண்டு பெண்களும் அவதூறுகளாலும், அதிகார மிரட்டல்களாலும் அரசியலைவிட்டே ஓரங்கட்டப்படுகின்றனர். ஆனால் அத்தனையையும் எதிர்கொண்டு, துணிவுடன் நிலைத்து நிற்கும் பெண்களே அரசியலில் வெற்றி பெறுகின்றனர். அந்தவகையில் நீங்கள் மனம் தளராது தமது அரசியல் பயணத்தைத் தொடர வேண்டும் என்பதே என்னுடைய அன்பான அறிவுறுத்தலுமாகும்.
பொதுவாழ்விற்கு வந்த பிறகு விமர்சனங்களை எதிர்கொள்ளவும் அவதூறுகளைக் கடந்து செல்லவும் கற்றுக் கொள்ள வேண்டும். விமர்சனங்களை தாங்க முடியாதவன், விரும்பியதை அடைய முடியாது. அவதூறுகளை தாங்க முடியாதவர்கள் அற்ப வெற்றியை கூடப் பெற முடியாது. எனவே அப்படியொரு பண்பட்ட மனப் பக்குவமும், தளராத உறுதியும் கொண்டு சோர்வுறாது தொடர்ந்து அரசியல் களத்தில் துணிவுடன் போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மராட்டிய மண்ணின் மகளும், பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராகப் போராடிய சமூக சீர்திருத்தவாதியுமான சாவித்திரி பாய் பூலே, அக்காலத்தில் பெண்களுக்கு கல்வி புகட்டுவதை கடுமையாக எதிர்த்தனர் பழமைவாதிகள். அவர் மீது சேற்றினையும் மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும் போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்ற பின் வேறோர் சேலை அணிந்து கொள்வார். எத்தனை துன்பங்கள் வந்தபோதும் தனது சமூகப் பணிகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்கவோ, கைவிடவோ அம்மையார் சாவித்ரிபாய் பூலே. அவருடைய உள்ள உறுதியே இலட்சியத்தை வெல்ல வைக்கும் உந்து சக்தியாக அவருக்கு இருந்தது என்பதை நீங்கள் உணர வேண்டும்.

இந்திய துணைக் கண்டத்தையே ஆட்டிப் படைத்த அம்மையார் இந்திரா காந்தியும் தமிழ்நாட்டு அரசியலின் அசைக்க முடியாத ஆற்றலாக இருந்த அம்மையார் ஜெயலலிதாவும் எதிர்கொள்ளாத விமர்சனங்களா? அவதூறுகளா? அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர்களே உடல் அளவிலும் உள்ள அளவிலும் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிட்ட போதும் அனைத்தையும் தாங்கிக் கொண்டு, மனம் தளராமல் போராடித்தான் இமாலய வெற்றிகளைப் பெற்றனர். அவர்களை எல்லாம் முன்மாதிரியாக கொண்டு நீங்கள் முன்னேற முயல வேண்டும். மாறாக துணிந்து அரசியலுக்கு வந்த, கலைத்துறை உள்ளிட்ட சிறப்பு அடையாளம் பெற்ற உங்களைப் போன்ற சில பெண்களே சோர்வுற்று, துவண்டு வெளியேறிவிட்டால் பிறகு எளிய பின்னணி கொன்ட பெண்கள் எப்படி அரசியலுக்கு வரத் துணிவார்கள்? வரமாட்டார்கள். அது மிக மோசமான முன்னுதாரணமாகிவிடும்.
எனவே எதற்காகவும், யாருக்காகவும் பயந்து தான் கொண்ட இலட்சியத்தை இழந்துவிடக் கூடாது என்பது ஒவ்வொரு பெண்ணும் ஏற்க வேன்டிய உறுதி மொழி. அந்த வகையில் நீங்கள் மனம் கலங்காது தொடர்ந்து அரசியல் களமாடி மக்கள் தொண்டாற்றி வெற்றிகரமான அரசியல்வாதியாக திகழ என்னுடைய வாழ்த்துகள்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி.












Click it and Unblock the Notifications