Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பச்சை துரோகம்".. வஞ்சிக்கிறீங்களே முஸ்லிம்களை.. திமுக மீது பாய்ந்த சீமான்.. பின்னாடியே வந்த எஸ்டிபிஐ

Subscribe to Oneindia Tamil

சென்னை: இஸ்லாமிய சிறைவாசிகளின் முன் விடுதலைக்கெதிராக, சுப்ரீம்கோர்ட்டில் பிரமாணப்பத்திரம் தாக்கல்செய்வதா? என்று திமுக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கால் நூற்றாண்டு காலமாகச் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளான கூலை இப்ராஹீம், யாசுதீன் கபாலி ஆகியோர் தங்களது முன்விடுதலைக்காக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், மதத்தைக் காரணமாகக் காட்டி, எதிர்ப்புத் தெரிவித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருக்கும் திமுக அரசின் செயல்பாடு பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.

Naam Tamizhar party seeman condemns the dmk government on the issue of muslim prisoners

திமுக ஆட்சியில் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வோம் எனக் கடந்த காலத்தில் கூறிய ஸ்டாலின், இன்றைக்கு அவர்களது விடுதலைக்கு எதிராக வேலைசெய்வது வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த அந்த மக்களுக்குச் செய்யும் படுபாதகமாகும். சற்றேறக்குறைய 25 ஆண்டுகளாய் சிறையில் வாடும் கூலை இப்ராஹீம், யாசுதீன் கபாலி ஆகிய இருவரும் முதுமையடைந்து, உடல் நலிவுற்ற நிலையில் எஞ்சிய காலத்தைக் குடும்பத்தோடு கழிக்க எண்ணி, நம்பிக்கைக் கொண்டு வழக்கு தொடுத்துள்ளனர்.

அந்த வழக்கில் அவர்களுக்கெதிராக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்து விடுதலையைத் தடுத்துக் கெடுத்திட முனையும் திமுகவின் மதவாதப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. அதிகாரம் கையிலிருந்தும் இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலையைப் பெற்றுத்தர மறுப்பதோடு, அச்சிறைவாசிகள் நடத்தும் சட்டப் போராட்டத்திலும் முட்டுக்கட்டை போடுவது மன்னிக்கவே முடியாத கொடுந் துரோகமாகும்.

Naam Tamizhar party seeman condemns the dmk government on the issue of muslim prisoners

சட்டத்தின்படி இருக்கும் தார்மீக உரிமையைப் பயன்படுத்தி முன்விடுதலை கோரும் நிலையில், அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தைக் காரணமாகக் காட்டி, அவர்கள் வெளியே வந்தால் குற்றச்செயலில் ஈடுபட்டு சமூக அமைதியைக் கெடுப்பார்கள் என்பது பாஜகவின் மதவாதக்குரல். ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் வெறுப்பரசியல். அதனை எதிரொலிக்கும் திமுகவின் செயல்பாடு மிக மிக இழிவானது.

இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலைக்காக எழுந்த அரசியல் நெருக்கடியினை மட்டுப்படுத்த ஆதிநாதன் தலைமையில் குழு அமைத்த திமுக அரசு, ஓராண்டைக் கடந்தும் அதற்குரிய எவ்வித ஆக்கப்பூர்வச் செயல்பாட்டையும் முன்வைக்காத நிலையில், தற்போது விடுதலைக்குக் கேடுவிளைவிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்களை வைத்து, கருத்துருவாக்கம் செய்வதும், நம்பி நின்ற இஸ்லாமிய மக்களை ஏமாற்றிப் புறந்தள்ளும் கயமைத்தனமாகும்.

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலைசெய்ய ஆளும் திமுக அரசின் கைகளிலேயே முழுமையான அதிகாரமிருந்தும், ஆளுநருக்கு அனுப்பித்தான் விடுதலையைப் பெற வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது அப்பட்டமான பச்சைப்பொய்! இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைக்கெதிராக வரிந்துகட்டியிருக்கும் திமுக அரசின் நடவடிக்கை கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

Naam Tamizhar party seeman condemns the dmk government on the issue of muslim prisoners

ஆகவே, இசுலாமிய சிறைவாசிகளான கூலை இப்ராஹீம், யாசுதீன் கபாலி ஆகியோரது முன்விடுதலை தொடர்பான வழக்கில், திமுக அரசு தாக்கல் செய்திருக்கும் பிரமாணப்பத்திரத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், போதிய தண்டனைக் காலத்தைக் கடந்த போதிலும், தாங்கள் சார்ந்திருக்கிற மதத்தைக் காரணமாக வைத்து, விடுதலை மறுக்கப்பட்டு வரும் இசுலாமிய சிறைவாசிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டும்" என்று தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக சீமான் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல, இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எம்.ரஃபீக் அகமது வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக சிறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கூலை இப்ராஹிம் மற்றும் யாசுதீன் கபாலி ஆகியோர் தங்களை முன்விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரம் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையை கேள்விக்குட்படுத்தியுள்ளது.

25 ஆண்டு காலமாக சிறைத் தண்டனை அனுபவித்து, தங்களது இளமையின் கால் நூற்றாண்டு காலங்களை சிறையில் கழித்து, தற்போது வயதுமுதிர்வு ஏற்பட்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், வாழ்வின் எஞ்சிய நாட்களையாவது தங்கள் குடும்பத்தினருடன் நிம்மதியாக கழிக்க விரும்பும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள், அரசின் கருணையை நீதிமன்றம் மூலமாக எதிர்பார்த்திருந்த வேளையில், முஸ்லிம் சிறைக்கைதிகளை விடுதலை செய்தால் சமூக அமைதி சீர்குலையும் என்றும், அவர்களின் விடுதலை மேடைப்பேச்சாக மாறி சமூக பதட்டத்தை ஏற்படுத்தும், அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பன போன்ற பொருந்தாத பல காரணங்களை குறிப்பிட்டு, அவர்களை சிறையில் வைத்திருப்பதே நல்லது என பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கின்றது.

ஆயுள் சிறைவாசிகள் விடுதலையைப் பொறுத்தவரை தற்போது சட்டத்தின் தடையோ அல்லது நீதிமன்றத்தின் தடையோ எதுவும் இல்லை என்பதும், முழுக்க முழுக்க அது மாநில அரசின் கைகளில் மட்டுமே உள்ள மாநில உரிமை சார்ந்த விஷயம் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகும், 25 ஆண்டுகளாக தமிழக சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் ஆயுள் சிறைக் கைதிகளை விடுவிப்பதில் மட்டும் தமிழக அரசால் தொடர்ந்து பாரபட்சம் காட்டப்பட்டு வருகின்றது. அரசின் கருணையானது, சிறைத் தண்டனை அனுபவிக்கும் மற்ற ஆயுள் கைதிகளுக்கு கிடைக்கும் போது, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு மட்டும் அந்த கருணை மதரீதியாக மறுக்கப்படுவது என்பது, ஒரு கண்ணுக்கு வெண்ணையும் மறு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைப்பது போலாகும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்குப் பின்னர், அதிக காலம் ஆயுள் கைதிகளாகச் சிறையிலிருப்பவர்கள் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் தான். ஆனால், ஆயுள் கைதிகளுக்கு வழங்கப்படுகிற பொது மன்னிப்பில் பாரபட்சம் காட்டப்படுவது என்பது சமூகநீதி அரசின் மதரீதியான அணுகுமுறையே வெளிக்காட்டுகிறது. சமூகநீதி என்று சொன்னால் சாதி, மதம் பாராமல் அனைவருக்கும் ஒருசேர நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஆகும். ஆனால் மத கண்ணோட்டத்துடன் அணுகுவது என்பது எப்படி சமூகநீதியாகும்.

இதற்கு முன்னர் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் தங்களின் முன் விடுதலைக்காக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியபோது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், "சட்டம் - ஒழுங்கைக் காப்பது என்பது அரசாங்கத்தின் பணி. கைதிகள் அல்லாமல் மற்றவர்களால் சட்டம்-ஒழுங்கிற்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூறப்படுகிற குற்றச்சாட்டுகளுக்காகக் கைதிகளை விடுவிக்காமல் தடுப்பது என்பது நீதிக்கு எதிரானது. இதுபோன்ற காரணங்களுக்காக அவர்களை விடுவிக்காமல் தடுத்தால், காலம் முழுவதும் இதே காரணங்களைச் சொல்லி, இவர்களின் விடுதலை மறுக்கப்படலாம். எனவே இவர்களின் மனுக்களை இரண்டு வார காலத்திற்குள் பரிசீலிக்க வேண்டும்." என்று அப்போது கூறியிருந்தனர்.

ஆனால், முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்குப் பல்வேறு தடைகளை அரசு ஏற்படுத்தி வைத்துள்ளது. முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலையாவதில் அனைத்து அரசுகளும் ஒரே விதமான அணுகுமுறையைத்தான் கையாள்கின்றன. விடுதலை என்பது மட்டுமல்லாமல், கைதிகளுக்குக் கிடைக்கின்ற பரோல் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு மறுக்கப்படுகின்றன.

ஒருபுறம் 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் சிறையில் வாடும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுதலை செய்வது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் குழு அமைத்துவிட்டு, மறுபுறம் நீதிமன்றத்தை நாடும் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்கு எதிராக மிக மோசமான யூகத்தின் அடிப்படையிலான பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்து விடுதலைக்கு முட்டுக்கட்டை போடுவது என்பது, தங்கள் வாக்குகளின் மூலம் பெரும் வெற்றியை அளித்த இஸ்லாமிய சமூகத்துக்கு செய்யும் துரோகமாகும்.

அதோடு, இந்த பிரமாணப்பத்திரத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், உள்நோக்கோடு, சிறுபான்மை விரோதப் போக்கோடு அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது. இந்த விசயத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பெயரை தவறாக பயன்படுத்திய உளவுத்துறை அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் நீதிமன்றத்தில் இதுபோன்று இரண்டாவது முறையாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த முறையும் யூகத்தின் அடிப்படையில் விடுதலையை மறுக்கும் காரணங்கள், இல்லாத அவதூறுகள் பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இம்முறையும் அதுபோல் கூறப்பட்டுள்ளது. இந்த விசயம் தமிழக முதல்வருக்கு தெரிந்துதான் நடக்கின்றதா? தெரிந்து நடந்தால் உண்மைக்கு புறம்பான அறிக்கைகளை அவர் ஏன் தடுக்கவில்லை. தமிழக முதல்வரின் கவனத்துக்கு தெரியாமல் நடக்கின்றது என்று சொன்னால் அது அவரது அரசுக்கு ஒரு ஆபத்தான சூழலாகும். இதனை மக்கள் மன்றத்தில் முதல்வர் தெளிவுப்படுத்த வேண்டும். தவறான அவதூறுகளை பிரமாணப்பத்திரத்தில் தந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக ரீதியில் செயல்படும் எஸ்.டி.பி.ஐ. மீது களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அதிகாரிகள் மீது எஸ்.டி.பி.ஐ. கட்சி சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கும்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், தேர்தல் காலத்திலும், இடைத்தேர்தல் காலத்திலும் இஸ்லாமிய சமூகத்திடம் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர் அதற்கெதிராக தங்கள் அணுகுமுறையை மாற்றுவது என்பது கண்டனத்திற்குரியது. ஆகவே, தமிழக அரசு, இஸ்லாமிய சமூக மக்களிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, பாரபட்சம் பாராமல் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தை திரும்பப்பெற்று, நீதிமன்றத்தின் மூலமாக ஆயுள் சிறைவாசிகளின் விடுதலைக் கோரிக்கை நிறைவேற துணை நிற்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+