நீங்க எங்க லிஸ்ட்லயே இல்லையே... பால் வியாபாரிகளை பேஸ்புக்கில் மிரட்டிய ரமணன் சஸ்பெண்ட்
பாஸ் வியாபாரிகளை பேஸ்புக்கில் மிரட்டி பதிவு போட்ட ஆயுதப்படை காவலர் ரமணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நாகை மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சென்னை: போலீஸ்காரர்களுக்கு இனி பால் ஊற்ற மாட்டோம் என்று அறிவித்த பால் விற்பனையாளர்களுக்கு பேஸ்புக்கில் பகிரங்க மிரட்டல் விடுத்த ஆயுதப்படை காவலர் ரமணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நாகை மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சாத்தான்குளத்தில் காவல்நிலையத்தில் நடந்த தாக்குதலில் ஜெயராஜ்,பென்னிக்ஸ் இருவரும் உயிரிழந்தனர். இருவரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் மரணத்திற்கு நீதி கேட்டு ட்விட்டர், பேஸ்புக்கில் பதிவுகள் போட்டு காவல்துறையினருக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இருவரின் மரணத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பால் விற்பனையாளர்கள், காவலர்களின் வீடுகளுக்கு பால் கொடுக்க மாட்டோம் எடுக்க அறிவித்தனர். பின்னர் தங்களது அறிவிப்பை திரும்ப பெற்றுக்கொண்டனர். இதற்கிடையே, சாத்தான்குளம் சம்பவத்தை சுட்டிக்காட்டி நாகை டிஎஸ்பி வாகனத்தின் ஓட்டுநராகப் பணிபுரியும் காவலர் ரமணன் முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவு செய்திருந்தார் அது பலராலும் பரபரப்பாக பேசப்பட்டது.
ரமணன், தனது பேஸ்புக் பக்கத்தில், பால் விற்பவர்கள் இனி யாராக இருந்தாலும் கேஸ் போடுவோம். நீங்க எங்க லிஸ்ட்லையே இல்லையே நீங்களாக வந்து மாட்டிக்கிட்டீங்க என்று மிரட்டும் தொனியில் பதிவிட்டிருந்தார். அவரின் அந்த பதிவு வைரலாக ஷேர் செய்யப்பட்டது. பின்னர் ரமணன் தமது பதிவை நீக்கிவிட்டார்.
இந்த பதிவு தொடர்பாக போலீஸ்காரர் ரமணன் ரோஹித்திடம் மாவட்ட எஸ்.பி. விளக்கம் கேட்டு மெமோ அனுப்பியிருந்த நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ் பி செல்வ நாகரத்தினம் உத்தரவிட்டுள்ளார்.
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் பொதுமக்களை கொடூரமாக தாக்குவேன் என சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஆயுதப் படை போலீஸ்காரர் சரவண முத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இப்போது பால் விற்பனையாளர்களை மிரட்டிய ரமணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications