நயினார் நாகேந்திரன் காலையிலேயே உருக்கம்.. நான் ஒருவன் ஓட்டுப் போடாவிட்டால் என்ன? இன்று நடப்பது என்ன?
சென்னை: தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் வலிமை ஒரு ஓட்டுக்கு உண்டு என்பதை உணர்ந்து, பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். நம்மிடம் உள்ள வாக்குரிமை என்பது பல போராட்டங்கள் மற்றும் தியாகங்களுக்குப் பிறகு கிடைத்த மிகப்பெரிய ஜனநாயகப் பரிசு என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது என்றும் நயினார் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என 4 முனைப் போட்டி நிலவுவதால் களம் மிகவும் விறுவிறுப்பாகக் காணப்படுகிறது.

இன்று வாக்குப்பதிவு
மொத்தமாக 4,023 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இவர்களின் வெற்றியைத் தீர்மானிக்க 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்தத் தேர்தல் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மக்களை வாக்களிக்கத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி வேண்டுகோள்
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் விடுத்துள்ள செய்தியில், தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்தத் புனிதமான ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக, இளைஞர்களும் பெண்களும் சாதனை படைக்கும் வகையில் அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அவரைத் தொடர்ந்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல பாஜகவின் அண்ணாமலை விடுத்துள்ள வேண்டுகோளில், "தேர்தல் நாள் என்பது நல்லாட்சியைத் தேர்வு செய்யும் மக்களின் சக்தியை முறையாகப் பயன்படுத்தும் நாள். வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை மட்டுமல்ல, அது ஒரு ஜனநாயகக் கடமை.
தற்போது கடுமையான வெயில் நிலவி வருவதால், பொதுமக்கள் தங்கள் வாக்குகளைக் காலை அல்லது மாலை நேரங்களில் பதிவு செய்வது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களால் மதிய நேரத்தில் செல்பவர்கள் கண்டிப்பாகக் குடையைப் பயன்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர்
இந்நிலையில் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள செய்தி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர் தனது பதிவில், "இன்று தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் தவறாது வாக்களித்து தங்கள் அடிப்படை ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
"நான் ஒருவன் ஓட்டுப் போடவில்லை என்றால் என்னவாகிவிடப் போகிறது?" என்ற கோணத்தில் அல்லாமல், "எனது ஒரு ஓட்டு, ஒட்டுமொத்தத் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் துருப்புச் சீட்டு" என்ற தொலைநோக்குப் பார்வையில் மக்கள் சிந்திக்க வேண்டும்.
நயினார் நாகேந்திரன் உருக்கம்
முடியாட்சிக்கு மட்டுமே பழக்கப்பட்டிருந்த நமது பாரதம், பல பரிணாமங்களுக்குப் பிறகு குடியாட்சிக்கு மாறியுள்ளது. நமது ஒவ்வொருவரின் ஓட்டுரிமைக்குப் பின்பும் லட்சக்கணக்கானோரின் தியாகங்களும், நூற்றுக்கணக்கான போராட்டங்களும் அடங்கியுள்ளன என்பதை நாம் உணர்ந்து, நம் ஓட்டுரிமையைத் தவறவிடக் கூடாது" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தலைவர்களின் இந்தத் தொடர் வேண்டுகோள்கள் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் எனப் பல தரப்பினரும் ஆர்வமாகப் பங்கேற்று வருகின்றனர். ஜனநாயகத்தின் ஆணிவேராகக் கருதப்படும் வாக்குப்பதிவு இன்று மாலை வரை நடைபெற உள்ளது. நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் கூறியது போல, ஒவ்வொரு தனிமனிதனின் வாக்கும் இந்த மாநிலத்தின் அடுத்த 5 ஆண்டுகால வளர்ச்சியைத் தீர்மானிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.












Click it and Unblock the Notifications