தமிழகத்தில் அரசியலில் ஜொலிக்கப் போகும் நடிகர் யார்?.. 2021 தேர்தலில் போட்டியா?.. நமீதா அதிரடி பதில்
சென்னை: தமிழகத்தில் அரசியலில் ரஜினி, கமல், சூர்யா, விஜய் ஆகியோரில் யார் வெல்ல போகிறார்கள் என்ற கேள்விக்கு நடிகையும் பாஜக நிர்வாகியுமான நமீதா சுவாரஸ்யமான பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை நமீதா திருமணத்திற்கு பிறகு பாஜகவில் இணைந்துவிட்டார். அவருக்கு அக்கட்சியில் ஒரு பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவரிடம் மாலைமலர் சார்பில் பேட்டி எடுத்த போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு நமீதா அளித்த பதில்களையும் பார்ப்போம்.

திருமணத்திற்கு பின் வாழ்க்கை எப்படி
கேள்வி:- திருமணத்துக்குப்பின் வாழ்க்கை எப்படியிருக்கிறது?
பதில்:- சந்தோசமாக இருக்கிறது. சினிமா, அரசியல் இரண்டிலும் ஈடுபாடுடன் இருக்கிறேன். நல்ல கணவர் அமைந்து இருக்கிறார். எனக்கு முழுமையான ஆதரவு தந்து கொண்டிருக்கிறார். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
கேள்வி:- சினிமா, அரசியல் இரண்டில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?
பதில்:- இரண்டுக்கும் சரிசமமாக நேரம் ஒதுக்குகிறேன். ஒரு சராசரி பெண்ணாக இருந்த எனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்ததை எண்ணி சந்தோஷப்பட்டேன். சினிமா மூலம் எனக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறேன். அடுத்த கட்டமாக அரசியலில் ஈடுபட்டேன். அதற்கும் ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள். எனவே என் நேரத்தை சினிமாவுக்கும், அரசியலுக்கும் சரிசமமாக பிரித்துக் கொடுக்கிறேன்.

அரசியல்
கேள்வி:- சினிமா, அரசியல் இரண்டிலும் ஆதரவு கொடுக்கிறார்கள் என்கிறீர்கள். பதிலுக்கு நீங்கள் ரசிகர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என்ன கொடுக்கப்போகிறீர்கள்?
பதில்:- விரைவில் ஒரு செய்தி வரும். அது ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கும். அதுபற்றி இப்போது சொல்லக்கூடாது. அதன் மூலம் ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி சொல்ல காத்திருக்கிறேன்.
கேள்வி:- ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா ஆகிய 4 பேரில் அரசியலில் பிரகாசிக்கப்போகிறவர் யார்?
பதில்:- (சிரித்தபடி): நான்கு பேருமே பலம் மிகுந்தவர்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இரண்டு கண்கள் மாதிரி. விஜய் மூளை மாதிரி. சூர்யா இதயம் மாதிரி.

தமிழகத்திலா
கேள்வி:- வரப்போகிற தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா? அப்படி போட்டியிட்டால் உங்கள் சொந்த மாநிலத்திலா அல்லது தமிழ்நாட்டிலா?
பதில்:- நான் தமிழ்நாட்டுக்கு வந்து 16 வருடங்கள் ஆகிறது. சென்னை எனக்கு சொந்த ஊர் மாதிரி ஆகிவிட்டது. இங்கேதான் வீடு இருக்கிறது. இங்கேதான் வரி கட்டுகிறேன். என் பாஸ்போர்ட் முகவரியும் இங்கேதான் இருக்கிறது. அதனால், இங்கேதான் தேர்தலில் போட்டியிடப் போகிறேன்.

கொரோனாவின் மாற்றம்
கேள்வி:-புதிய படங்களை தியேட்டரில் வெளியிடாமல், இணையதளத்தில் வெளியிடுகிறார்களே... அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- இனிமேல் அதுதான் வருங்காலம். கொரோனா சில நல்ல மாற்றங்களையும் தந்து இருக்கிறது." இவ்வாறு நமீதா கூறினார்.












Click it and Unblock the Notifications