கனிமொழியே சூப்பரா நடத்துனாங்களே! நம்ம ஊரு திருவிழா.. வெடித்து கிளம்பும் ஆதங்கம்! பரவும் அந்த ஆடியோ!
சென்னை: தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் நடத்தப்பட்ட 'நம்ம ஊரு திருவிழா ' நிகழ்ச்சியில் கிராமிய கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தமிழ்நாடு அரசின் கலை பண்பாடு தொல்லியல் துறை சார்பில், 'நம்ம ஊரு திருவிழா ' என்ற நிகழ்ச்சி சென்னையில் உள்ள தீவுத்திடலில் கடந்த திங்கள் கிழமை நடந்தது. துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார்.

நம்ம ஊரு திருவிழா
தமிழ்நாட்டில் அழிந்து வரும் பாரம்பரிய கலைகளையும் கலைஞர்களையும் பாதுகாக்கவும், அந்த கலைகளை மக்களிடம் கொண்டு செல்லவும் இந்த திருவிழா நடத்தபடுவதாக சொல்லப்பட்டது. ஆனால், அந்த விழாவில் மக்கள் கலந்துகொள்ளவில்லை. பள்ளிக்கூட மாணவ மாணவிகளை அழைத்து வந்து நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கிறார்கள். இதில் பாரம்பரிய கலைஞர்கள் அனைவரும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கலைஞர்கள் மத்தியில் ஆதங்க குரல்கள் எழுந்துள்ளன.

அவசரகதி
இப்படி அவசரகதியில் ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டிய அவசியம் என்ன ? திங்கள் கிழமை என்பது மக்கள் அலுவலகம் செல்லும் நாள். அந்த நாளில் விழா நடத்தினால் மக்கள் எப்படி அதை பார்க்க வருவார்கள் ? விடுமுறை நாட்களில் நடத்தினால்தானே மக்களுக்கும் கலைஞர்களுக்கும் பயன் ! அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு ஏதோ கடமைக்கு நடத்தப்பட்டதாகத் தான் தெரிகிறது. இதனால் பல கோடி பணம் அரசுக்கு விரயம்.

திட்டம் இல்லை
எந்தவித திட்டமிடலும் இல்லாமல் அவசரம் அவசரமாக நடத்த வேண்டிய அவசியம் என்ன ? என்றெல்லாம் ஆதங்கப்படுகிறார்கள். இது குறித்த தங்களின் ஆதங்கத்தை ஆடியோவாக அமைச்சருக்கு தஞ்சையை சேர்ந்த ஒரு கிராமிய கலைஞர் அனுப்பி வைத்துள்ளாராம். பாரம்பரிய கலைகளை பாதுகாக்கவும், அதன் கலைஞர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திப் பிடிக்கவும் கடந்த 2006-11 கருணாநிதி ஆட்சி காலத்தில், 'சென்னை சங்கமம்' என்ற பெயரில் பிரமாண்டமாக கனிமொழி நடத்தினார். ஒரு வாரம் நடந்த பல்வேறு கலைகளின் பாரம்பரிய நிகழ்ச்சிகள் மக்களிடம் உணர்வுபூர்வமாக சென்று சேர்ந்தது.

சென்னை சங்கமம்
அப்போதைய முதல்வர் கருணாநிதியும் மிகவும் மகிழ்ந்தார். கனிமொழிக்கு அனைத்து தரப்பிலும் பாராட்டுகள் குவிந்தன. கடந்த அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் சென்னை சங்கமம் போன்ற நிகழ்வுகள் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், திமுக ஆட்சி வந்ததும் சென்னை சங்கமம் மீண்டும் நடத்தப்படுமா என கேள்விகள் எழுந்தன. கலைஞர்கள் பலரும் இது குறித்து கனிமொழியிடம் கேட்டனர். இது பற்றிய கேள்விக்கு கூட நெல்லை புத்தக கண்காட்சி செய்தியாளர் சந்திப்பில் கனிமொழி பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

கனிமொழி பதில்
அமைச்சரிடம் கேளுங்கள் என்று கனிமொழி அப்போது தன் பக்கம் நீட்டப்பட்ட மைக்கை அமைச்சர் தங்கம் தென்னரசை நோக்கி திருப்பினார். அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த கேள்விக்கும் புத்தக கண்காட்சிக்கு என்ன சம்பந்தம் என்று பதில் அளித்தார். இந்த நிலையில்தான், சென்னை சங்கமம் என்ற பெயர் அடையாளத்தை அழிக்கும் முயற்சியாக நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டிருக்கிறது. பாரம்பரிய கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்கிற ஆதங்கத்தை கிராமிய கலைஞர்கள் வெளிப்படுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications