அடுத்த “பிரம்மாண்டம்”..ரெடியாகும் சென்னை! ரூ.308 கோடியில் எல்லாம் ஒரே இடத்தில் -உலகமே வியக்கப்போகுது
சென்னை: சென்னை வர்த்தக மையத்தில் 4,000 பேர் அமரக்கூடிய இருக்கைகளுடன் ரூ.308.75 கோடி மதிப்பில் மாநாடு மற்றும் பொருட்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தால் ரூ.308.75 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்கத் திட்டப்பணிகளான கூடுதல் பொருட்காட்சி மற்றும் மாநாட்டு அரங்கத்திற்கான கட்டுமானப் பணி உள்ளிட்ட விரிவாக்கப் பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

என்ன சிறப்பு?: இந்த வர்த்தக மையத்தில் 9,00,000 சதுர அடி பரப்பளவில் ரூ.308.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 4000 நபர்கள் அமரக்கூடிய மாநாட்டு அரங்கம் மற்றும் 5 பொருட்காட்சி அரங்கங்கள், 1300 வாகனங்கள் நிறுத்தும் வசதி கொண்ட பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்பட உள்ளன. இந்த கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த தலைமைச் செயலாளர், வேலையாட்களின் எண்ணிக்கையை அதிகரித்து திட்டப்பணிகளை விரைவுபடுத்தி முடிக்கவும், ஜனவரி 2024ல் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர் மாநாடு சிறப்புற நடைபெறும் வகையில் இக்கட்டுமானப் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மழைநீர் வடிகால்: இதனைத் தொடர்ந்து, அசோக் நகர் 4ஆவது அவென்யூவில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் ரூ.7.80 கோடி மதிப்பீட்டில் 1.64 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் பணியினையும், மூலதன நிதியில் ரூ.23.45 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் 5.29 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணி, அயனாவரம் டேங்க் சாலையில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் ரூ.7.27 கோடி மதிப்பீட்டில் 1,820 மீ. நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி, ஸ்டீபன்சன் சாலையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வெளியேற்றும் தொட்டி அமைக்கும் பணி மற்றும் நீர்வளத்துறையின் சார்பில் ஓட்டேரி நல்லா கால்வாயில் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் 10.84 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு பருவமழைக்கு முன்னதாக இப்பணிகளை முடித்திட தலைமை செயலாளர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
சுரங்கப்பாதை: தொடர்ந்து, கணேசபுரம் சுரங்கப்பாதை அருகில் இரயில்வே துறையின் மூலம் மழைநீர் கால்வாய் (Culvert) அமையவுள்ள இடத்தினையும், காந்தி இர்வின் சாலையில் இரயில்வே துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றின் சார்பில் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் கால்வாய் (Culvert) அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு. இப்பணிகளை தொழில்நுட்ப ரீதியாக திட்டமிட்டு மேற்கொள்ள தலைமைச் செயலாளர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.












Click it and Unblock the Notifications