அவங்க மேல வரணும்..சின்னத்துரை சொன்ன பளிச் பதில்! திருநங்கை நிவேதாவுக்கு முதல்வர் கொடுத்த நம்பிக்கை!
சென்னை: பிளஸ் டூ பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவன் சின்னத்துரை சென்னையில் தேர்வு எழுதிய திருநங்கை நிவேதா ஆகியோரை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் வரவழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு திருக்குறள் புத்தகத்தையும் முதலமைச்சர் பரிசாக அளித்தார்
பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் மாணவர்கள் பல்வேறு பகுதிகளில் சாதனை படைத்திருக்கின்றனர். குறிப்பாக அடித்தட்டு எளிய மாணவர்கள் மகத்தான சாதனை படைத்து வருவதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில் நேற்று வெளியான தேர்வு முடிவுகளில் மாணவர்கள் பலரும் அபார சாதனை படைத்திருந்தனர். குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் பள்ளிகளில் ஒரே ஒரு திருநங்கையான நிவேதா மட்டும் தேர்வு எழுதி இருந்த நிலையில் அவர் வெற்றி பெற்றிருந்தார்.
திருநங்கை நிவேதா: சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தேர்வு எழுதிய தமிழகத்திலேயே பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே திருநங்கை என்ற பெருமையை பெற்றார். நீட் தேர்வு எழுதியுள்ள தான் மருத்துவ மேற்படிப்பு மேற்கொள்ள வேண்டும் என ஆசை இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

நாங்குநேரி சின்னதுரை: இதேபோல நாங்குநேரியில் சாதிய வெறி காரணமாக சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சின்னத்துரை பிளஸ் டூ தேர்வில் 469 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இருவர் குறித்த செய்தியும் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில் இருவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார். அவர்களுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் பேனாவை முதலமைச்சர் ஸ்டாலின் பரிசாக வழங்கினார்.
முதலமைச்சர் ஸ்டாலின்: முதலமைச்சரை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்த திருநங்கை நிவேதா தனக்கு பொருளாதார வசதி இல்லை.. இருந்தபோதும் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.. நீட் தேர்வில் வெற்றி பெற்று எனக்கு சீட் கிடைக்கும் என நம்புகிறேன்.. அப்படி கிடைக்கும்போது உயர் கல்விக்கு தேவையான உதவிகளை செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்து இருப்பதாக தெரிவித்தார்.

சிஏ படிக்க ஆசை: தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாங்குநேரி மாணவன் சின்னத்துரை," பிகாம் படித்துவிட்டு சிஏ படிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று முதலமைச்சரிடம் கூறியதாகவும் அதற்கு தேவையான உதவிகளை செய்வதாக முதலமைச்சர் தெரிவித்ததாகவும் கூறினார்.
பளிச் பதில்: உங்களை தாக்கியவர்களுக்கு நீங்கள் என்ன பதில் சொல்ல விரும்புகிறீர்கள் என செய்தியாளர்கள் மாணவன் சின்னதுரையிடம் கேட்டனர். அதற்கு பதில் அளித்தவர் அவர்களும் படித்து பெரிய இடத்திற்கு வர வேண்டும் என கூறினார்.












Click it and Unblock the Notifications