சிறைக்கம்பி T0 சிம்மாசனம்! நாயுடுவை முதல்வராக்கிய மகன்! யார் இந்த நாரா லோகேஷ்?
ஆந்திர அரசியல் களத்தில் சந்திரபாபு நாயுடு சிறைக்குப் போனது, இனி தெலுங்கு தேசம் கட்சி அவ்வளவுதான் என்று எழுதியவர்கள் ஏராளம். அவரது மகனின் தோல்வி இந்தச் சரிவுக்குத் தொடக்கப் புள்ளி எனப் பல செய்திகள் வெளியாகின.
இந்திய அரசியலில் 40 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட சந்திரபாபு நாயுடுவின் கட்சியை தோற்கடித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த ஜெகன்மோகன் ரெட்டி, இனி இந்த மாநிலத்தின் ஒரே வெற்றி நாயகன் தான் மட்டுமே என்று நம்பிக்கையிலிருந்தார்.

அனைத்தையும் தவிடு பொடியாக்கிவிட்டது ஆந்திராவில் நடைபெற்ற சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல்.
மீண்டும் மத்தியிலும் மாநிலத்திலும் நாயுடுவின் கை ஓங்கியுள்ளது. இந்த வெற்றிக்கு எல்லாம் வியூகம் அமைத்துச் செயல்பட்ட நாரா லோகேஷ்தான் காரணம் என ஆந்திர ஊடகங்கள் பக்கம் பக்கமாக எழுதி வருகின்றன.
தோல்வியிலிருந்து வெற்றிக்கான பாடத்தை கற்றுக் கொண்டுள்ளார் லோகேஷ். அவரது மறு பிரவேசம் தெங்கு தேசம் கட்சியை உச்சத்திற்குக் கொண்டு வந்து உட்கார வைத்துள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச்செயலாளராக நாரா லோகேஷ், மீண்டு எழுந்ததற்கு அவரது சகிப்புத்தன்மைதான் முதல் காரணம் என்கிறார்கள். அவரது 'யுவ களம்' பாத யாத்திரை ஆந்திர அரசியல் ஆலமரத்தின் ஆணிவேர் வரை சென்று வேலை பார்த்துள்ளது.
2019 சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரிடம் தனது வெற்றியைப் பறி கொடுத்தார். அவர் போட்டியிட்ட தொகுதியின் பெயர் மங்களகிரி. அந்தப் பெயரில் தான் மங்களம் இருந்தது. லோகேஷின் வாழ்க்கையில் அது இல்லை.

இந்த முறை அவர் 167710 வாக்குகளைப் பெற்று ஜெகன்மோகன் கட்சி வேட்பாளரை 91413 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறார்.
கடந்த முறை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக நின்று வெற்றி பெற்ற அல்லா ராமகிருஷ்ண ரெட்டி 108,464 வாக்குகளை வாங்கி இருந்தார். அப்போது லோகேஷ் 103127 வாக்குகளைத்தான் பெற்றிருந்தார்.
இந்த முறை தான் போட்டியிட்ட தொகுதியில் 60 ஆயிரம் வாக்குகள் மேல் பெற்றுள்ளதுடன் கட்சி சட்டசபையில் 135 இடங்களிலும் மக்களவையில் 16 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்துள்ளார்.
கூட்டணிக் கட்சியான ஜனசேனா 21 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆக, இந்தக் கூட்டணிக்கு வியூகம் வகுத்தது, பாஜகவுடன் நெருக்கம் காட்டக் கட்சித் தலைமையின் மனநிலையை மாற்ற உதவியது என்று லோகேஷ் இந்தத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் சூத்திரதாரியாக இருந்துள்ளார்.
தனது பாத யாத்திரை மூலம், மாநிலத்தில் ஆட்சியை மீட்டு எடுத்ததுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 2வது பெரிய கட்சியாகத் தெலுங்கு தேசம் உருவெடுத்துள்ளது.
"அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்" என்று நாரா லோகேஷ் ஆங்கில பத்திரிகையான தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பேட்டியின் மூலம் உத்தரவாதம் கொடுத்துள்ளார்.

"எனது பாத யாத்திரை என்னை அடிப்படையில் மாற்றியுள்ளது. என்னை அடித்தள அளவில் உள்ள மக்களைப் புரிந்து கொள்ள உதவி செய்துள்ளது. மேலும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளது" என்று கூறியுள்ளார் லோகேஷ்.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை குப்பம் தொகுதியிலிருந்து ஸ்ரீகாகுளம் வரை இவர் மேற்கொண்ட 3,000 கி.மீ அரசியல் யாத்திரையை மேற்கொண்டார். 'யுவ களம்' மூலம் பல தரப்பு மக்களை அவர் சந்தித்தார்.
தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரான லோகேஷ், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர். இந்தப் பயணம் தான் டிடிபியின் மறுமலர்ச்சிக்கு வழிபோட்டு கொடுத்துள்ளது.
இதற்கு முன்னதாக எம்.எல்.சி. பதவியிலிருந்தவர் லோகேஷ். அமைச்சராகவும் இருந்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பரில், ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் தொடர்பாக இவரது தந்தை கைது செய்யப்பட்ட போது இவருக்கு அரசியலின் உண்மை முகம் புரிய ஆரம்பித்தது.
நாயுடு சிறையிலிருந்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடுவால் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முடியுமா என்று அவரது தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில் ஒரு தயக்கம் நிலவியது.
அந்தத் தருணத்தில் லோகேஷ் சரியான சந்தர்ப்பம் பார்த்து கட்சிக்கு மறு உயிர் கொடுக்க களத்தில் குதித்தார். தொண்டர்களைத் தட்டி எழுப்பி, உற்சாகத்தைக் கொடுத்தார். இவரால் கட்சிக்குள் புதிய மின்சாரம் பாய்ந்தது.
தனது தந்தையின் விடுதலைக்காக ஒரு மகனாக டெல்லி வரை சென்று அனைத்து கதவுகளையும் தட்டினார் லோகேஷ். அமித்ஷா தொடங்கிப் பல மேல்மட்ட அமைச்சர்களின் உதவியை நாடினார். அது மிகப் பெரிய கஷ்டமான காரியமாக இருந்ததை உணர்ந்தார்.
இன்று தடைகளைத் தாண்டி, ஜெகன்மோகன் ரெட்டியை வீழ்த்தி தனது தந்தையை அரியணையில் அமரவைத்துள்ளார் இந்த மகன்!












Click it and Unblock the Notifications