கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி ராஜினாமா செய்ய போகிறாரா?.. விரைவில் இடைத்தேர்தலா? குண்டை போடும் பாஜக
சென்னை: கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ராஜினாமா செய்ய போகிறாரா, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தலா என தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: அன்பு சகோதரியார் நாடாளுமன்ற உறுப்பினர் அம்மையார் ஜோதி மணி அவர்களுக்கு வணக்கம்.
இதை ஃபேஸ்புக் வாயிலாக எழுத வேண்டிய அவல நிலை வந்து விட்டதை எண்ணி வருத்தம் அடைகிறேன். தங்களிடம் கன்னியாகுமரியிலேய நேரடியாக கேட்டு விட நினைத்தேன்.

வாய்ப்பு
தங்களை தனியாக சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை, போனில் தங்களை அழைத்தேன் தாங்கள் எடுக்கவே இல்லை. ஆனால் வேறு வழியின்றி இதன் மூலம் தங்கள் பதிலைப் பெற விரும்புகிறேன். தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி வருகையை முன்னிட்டு நான் நிறைய வசூல் செய்து விட்டதாக முக்கியத் தலைவர் ஒருவரிடம் கூறி உள்ளீர்கள். இதைக் கேட்ட உடன் என் மனம் துடிதுடித்து விட்டது.

சவால்
நான் தங்களுக்கு சவால் விட்டு கூறுகிறேன், நான் ஒரே ஒருவர் இடத்தில் வசூல் செய்து இருக்கிறேன் என்று தாங்கள் நிருபித்து விட்டால், என்னுடைய மாநில துணைத் தலைவர் பதவியை அந்த நொடியே ராஜினாமா செய்து விடுகிறேன். அப்படி தாங்கள் நிருபிக்கா விட்டால், நீங்கள் உங்கள் எம்பி பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய தயாரா?

கே எஸ் அழகிரி
மேலும் தாங்கள் நன்றி சொல்லி ஃபேஸ்புக்கில் பதிவு செய்து உள்ளதை படித்தேன். சிரிப்பு தான் வந்தது. உழைப்பைத் திருடாதீர்கள். இரவு பகல் பாராமல் இந்த வயதிலும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாவட்டம் மாவட்டமாக கூட்டம் போட்டு ராகுல் வருகையின் முக்கியத்துவத்தை உணர்த்தி வந்த கூட்டம் தான் அது. அவருக்கு துணையாக இவிகேஎஸ் இளங்கோவன், கே.வி.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர் போன்றவர்கள் எடுத்த பெரும் முயற்சியை மறுக்க முடியுமா உங்களால்?

பாதயாத்திரை
இந்தப் பாதயாத்திரையில் தங்கள் பங்களிப்பு என்ன என்பதையும் அந்த ஃபேஸ்புக் பதிவில் தாங்கள் குறிப்பிட்டு இருக்கவேண்டும். எதையுமே செய்யாத தாங்கள், எல்லாவற்றையும் நீங்களே செய்தது போல எழுத எப்படி உங்கள் மனசாட்சி இடம் தருகிறது? எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தச் செலவில் பங்கு எடுத்து கொண்டார்கள்.

ஜோதிமணியின் பங்களிப்பு என்ன?
தங்கள் பங்களிப்பு இதில் என்ன, அதில் பங்களிப்பு இல்லாத தாங்கள் ஃபேஸ்புக்கில் எழுதுவது எந்த வகையில் நியாயம். உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு சகோதரர் பொன் கிருஷ்ணமூர்த்தி, நன்றி என தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பிரச்சினை காங்கிரஸ் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜினாமா செய்கிறாரா
காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தியின் பேஸ்புக் பதிவை குறிப்பிட்டு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறுகையில், ராஜினாமா செய்கிறாரா கரூர் பாராளுமன்ற உறுப்பினர்? கரூர் பாராளுமன்றத்திற்கு இடைத் தேர்தலா? என கேள்வி எழுப்பியுள்ளார். ராகுல்காந்தியின் குட் வில் புக்கில் இடம்பெற்றுள்ள ஜோதிமணி விரைவில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பதவியில் அமர்த்தப்படுவார் என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications