நீங்க காலேஜ் கொண்டு வாங்க! இடம் தருவது என் பொறுப்பு! சட்டசபையில் தாராளம் காட்டிய நத்தம் விஸ்வநாதன்!
சென்னை: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்கு புதிதாக அரசு கலை அறிவியல் கல்லூரி வேண்டும் என சட்டசபையில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. நத்தம் விஸ்வநாதன், கல்லூரிக்கு உரிய இடம் தருவதை தனது சொந்தப் பொறுப்பில் ஏற்றுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
நத்தம் தொகுதியில் ஏற்கனவே உள்ள தனியார் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் பொன்முடி, இருப்பினும் உங்கள் கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் 11வது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கேள்வி நேரத்தின் போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் புதிய கல்லூரி கேட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அந்த வகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதனுக்கு கேள்வி நேரத்தின் போது சபாநாயகர் அப்பாவு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அந்த நேரம் பார்த்து நத்தம் விஸ்வநாதன் சட்டசபையில் இல்லை. இதனால் அவருக்கு பதிலாக செல்லூர் ராஜூ பேச எழுந்தார்.
அவர் பேச ஆரம்பித்த சில நொடிகளில் நத்தம் விஸ்வநாதன் அரக்க பறக்க சட்டசபைக்குள் வந்தார். இதோ அண்ணனே வந்துட்டாரு என்று கூறிவிடு செல்லூர் ராஜு தனது இருக்கையில் அமர்ந்தார். இதைப்பார்த்த சபாநாயகர் அப்பாவு செல்லூர் ராஜுவுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என தனது பாணியில் கலாய்த்தார்.
இதனால் பேரவை தொடங்கியவுடன் சிரிப்பலை உருவானது. இதனிடையே சாரி லேட்டாகிடுச்சு என்று வந்தும் வராததுமாக மைக் பிடித்து பேசிய நத்தம் விஸ்வநாதன், தனது நத்தம் தொகுதி பற்றி ஒரு முன்னுரையை கொடுத்து புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி வேண்டும் என்ற டிமாண்டை வைத்தார்.
அதுமட்டுமல்ல அரசு கலை அறிவியல் கல்லூரி கொண்டு வரப்படுமானால் இடத்தை பற்றி அரசு கவலைக் கொள்ளத் தேவையில்லை என்றும் இடம் வழங்க வேண்டியது தனது சொந்தப் பொறுப்பு எனவும் தாராளம் காட்டினார்.
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், தனது சொந்த நிலத்தை வழங்குகிறேன் என்று அவர் கூறுகிறாரா அல்லது நிலப் பிரச்சனையின்றி நிலம் தேர்வு செய்து தருகிறேன் எனக் கூறுகிறாரா என்பதை சரியாக விளக்காதது தான்.
இதனிடையே நத்தம் தொகுதியில் ஏற்கனவே உள்ள தனியார் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான இடங்களில் யாரும் சேராத நிலை இருப்பதாகவும் இருப்பினும் நத்தம் விஸ்வநாதன் கேட்கும் அரசு கலை அறிவியல் கல்லூரியை கொண்டு வர தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications