சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி
சென்னை: சென்னையில் 61 வயது மூதாட்டி மீதான கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் சிறுவனுக்கு, போலீஸ்காரர் ஒருவர் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் பற்றி தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இதுதொடர்பாக அடுத்த 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு டிஜிபிக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் தற்போது அடுத்தடுத்து நடந்த 2 குற்ற சம்பவங்கள் மாநகரையே அதிர வைத்துள்ளன. ஒன்று 61 வயது மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம். இன்னொன்று 11ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு போலீஸ் ஏட்டு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம்.

அதாவது சென்னை வேளச்சேரியில் 61 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவருக்கு வீடு கிடையாது. இவர் வேளச்சேரி பஸ் நிலையம் அருகே இரவில் படுத்து தூங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு அந்த மூதாட்டி வேளச்சேரி 100 அடி ரோட்டில் அதிகாலை 4 மணிக்கு நடந்து சென்றார். அப்போது அவரது காலில் காயம் இருந்தது. ரத்தம் வடிந்தது. இதை பார்த்தவர்கள் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தனர். ரோந்து பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து மூதாட்டியை ஆம்புலன்ஸில் எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மூதாட்டியிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. ரேபிடோ பைக்கில் வந்தவர்கள் அவரை தூக்கி சென்று மாநகராட்சி பூங்கா அருகே வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பீகாரை சேர்ந்த முகமது முத்தாப் (வயது 26), முகமது அதீல் (23) ஆகியோரை கைது செய்தனர். அதேபோல்15 வயது சிறுவனும் சிக்கினார். இதில் முகமது முத்தாப், முகமது அதீல் ஆகியோர் ஹோட்டலில் வேலை செய்து வருவதாகவும், அவர்கள் சேர்ந்து மூதாட்டியை கூட்டு பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
அதேபோல் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் வேலப்பன். இவர் 2013ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இவர் கோடம்பாக்கத்தில் 11ம் வகுப்பு படிக்கும் நாகர்கோவிலை சேர்ந்த சிறுவனுக்கு மதுபானம் கொடுத்து வலுக்கட்டாயமாக குடிக்க வைத்துள்ளார். அதன்பிறகு குடிபோதையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் போலீசார், ஏட்டு வேலப்பன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். அதோடு அவரை கைது செய்தனர். அவரை பணி நீக்கம் செய்து சென்னை மாநகர போலீஸ் ஆணையர் அமல்ராஜ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இந்த 2 சம்பவங்களும் சென்னையை அதிர வைத்துள்ளன. இந்நிலையில் தான் 61 வயது மூதாட்டியின் கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் சிறுவனுக்கு போலீஸ் ஏட்டு கொடுத்த பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. இதுதொடர்பாக விரிவான அறிக்கையை 7 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications