தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தங்கிய ‘தேசிய பாதுகாப்பு ஆலோசகர்’ அஜித் தோவல்.. பரபரத்த கோட்டை!
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தங்கி சென்ற தகவல் கோட்டையில் ஆளும் தரப்பினரிடையே பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை 3 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருக்கிறார் என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் தமிழ்நாடு ஆளுநரின் செயலாளர் பதிலளிக்க நோட்டீஸும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ளது.

சிறப்பு சட்டசபை கூட்டம்: இதனிடையே தம்மிடம் நிலுவையில் இருந்த 10 மசோதாக்களை திடீரென தமிழ்நாடு சட்டசபைக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதனால் தமிழ்நாடு சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு, 10 மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
விளாசிய முதல்வர் ஸ்டாலின்: தமிழ்நாடு சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியை மிக கடுமையாக விமர்சித்திருந்தார். "ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும் - அது இருக்கும் வரை மக்களாட்சித் தத்துவத்துக்கு அடங்கி இருக்க வேண்டியது தான் மரபு ஆகும். பாஜக ஆளாத மாநிலங்களில் - ஆளுநர்களின் மூலமாக குடைச்சல் கொடுத்து வருகிறார்கள். இப்போதுமாண்பமை உச்சநீதிமன்றம் தலையில் ஓங்கி குட்டுவைத்தவுடன் அவசர அவரமாக கோப்புகளை திருப்பிஅனுப்புவதும், சில கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்குவதும் என நாடகம் ஆடுகின்றார் ஆளுநர்" எனவும் பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னையில் அஜித் தோவல்: இந்த பின்னணியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கி சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அஜித் தோவல் நடத்திய ஆலோசனை குறித்த தகவல்கள் எதுவும் தகவல்கள் வெளியாகவில்லை. வெளியூர் செல்லும் வழியில் சென்னை வந்த அஜித் தோவல், நட்பு அடிப்படையில் ஆளுநர் மாளிகையில் தங்கியதாக சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. அஜித் தோவல் சென்னையில் முகாமிட்டு ஆளுநர் மாளிகையில் தங்கிய தகவல் தமிழ்நாடு அரசின் கோட்டை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications