"24 மணி நேரம் டைம்..!" சென்னை பள்ளியில் மதமாற்றப் புகார்! குழந்தைகள் நல ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம்
சென்னை: சென்னை பள்ளி ஒன்றில் கிருத்துவ மதத்தைப் பின்பற்றச் சொல்லி நிர்வாகம் வற்புறுத்துவதாகும் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்குத் தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.
தமிழ்நாடு முழுக்க பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதில் ஓரிரு கல்வி நிறுவனங்களில் மத மாற்றம் நடைபெறுவதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், அதுபோன்ற ஒரு புகார் தான் இப்போதும் எழுந்துள்ளது.

ஆய்வு
தலைநகர் சென்னையில் இயங்கி வரும் கிருத்துவ பள்ளி விடுதி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு பல்வேறு மாணவ- மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில், வழக்கமான ஆய்வுப் பணிகளுக்காகக் கடந்த செப். 6ஆம் தேதி தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் நல ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார் உள்ளிட்டோர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

மதமாற்றப் புகார்
அந்த ஆய்வில் பள்ளியுடன் இணைக்கப்பட்ட மாணவிகள் விடுதி பதிவு செய்யாமல் நடத்தப்பட்டது தெரிய வந்தது. அங்கு இருந்த ஏழை மாணவிகள் மோசமான நிலையில் தங்கவைக்கப்பட்டு இருந்ததாகவும் மேலும் அவர்களை கிருத்துவ மதத்தைப் பின்பற்றச் சொல்லி நிர்வாகம் வலியுறுத்துவதாகவும் மாணவிகளில் சிலர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து மாணவிகளை மீட்டு, உடனடியாக மாற்று இடத்தில் தங்க வைக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் நல ஆணையத்திற்கு அறிவுறுத்தினர்.

நடவடிக்கை இல்லை
இருப்பினும், இந்த விவகாரத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாகத் தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குநருக்குத் தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய தலைவர் கடிதம் எழுதி உள்ளார். அதில் "நேற்றைய தினம் அங்குத் தங்கியுள்ள சில மாணவிகள் தொடர்பு கொண்டு இன்னும் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறினர்.

கடிதம்
மேலும், ஆய்வுக்குப் பின்னர் ஹாஸ்டல் வார்டன் மாணவிகளை மிரட்டுவதாகவும் மாணவிகளின் பெற்றோரைத் தொடர்பு கொள்ளும் பள்ளி நிர்வாகம் மாணவிகள் அங்கேயே தங்க ஒப்புதல் தருமாறு பெற்றோரை வலியுறுத்துவதாகவும் புகார்கள் வந்துள்ளன. எனவே, அங்குள்ள மாணவிகள் அடுத்த 24 மணி நேரத்தில் மீட்கப்படப்பட்டு தேசிய குழந்தைகள் உரிமை ஆணையத்தில் முன்னிறுத்தப்பட வேண்டும்" என அதில் கூறப்பட்டு உள்ளது.

24 மணி நேரம்
மாணவிகள் தங்க மாற்று இடமும் உடனடியாக ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகம் மற்றும் இதில் தொடர்புடைய நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அடுத்த மூன்று நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும் கோரப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications