நாட்டிலேயே பாதுகாப்பற்ற நகரம் கொச்சி தானாம்.. லிஸ்டில் சென்னை, கோவை, பெங்களூர் எங்கே? முக்கிய தகவல்
சென்னை: நாட்டில் பதிவாகும் குற்றங்களை அடிப்படையாக வைத்து என்சிஆர்பி முக்கிய டேட்டாவை பகிர்ந்துள்ளது. இதில் மிகவும் குறைந்த குற்றங்களுடன் கொல்கத்தா நாட்டிலேயே மிகவும் பாதுகாப்பான நகரமாக இருக்கிறது. 19 நகரங்களைக் கொண்ட இந்த லிஸ்டில் சென்னை, கோவை, பெங்களூர் நகரங்கள் எங்கே உள்ளன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நாடு முழுக்க பதிவாகும் குற்றங்களின் விவரங்களை என்சிஆர்பி எனப்படும் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தொகுத்து வழங்கும்.. என்ன மாதிரியான குற்றங்கள் பதிவாகிறது.. எந்த மாநிலத்தில் அதிகக் குற்றங்கள் பதிவாகிறது என மிக விரிவான தகவல்கள் இதில் இடம்பெறும். அதன்படி இந்தாண்டிற்கான பட்டியல் வெளியாகியுள்ளது.

என்சிஆர்பி டேட்டா
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) இந்த அறிக்கையின்படி, இந்தியாவின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் கொல்கத்தா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாகவே மிகக் குறைந்த குற்றங்களே கொல்கத்தாவில் பதிவாகியுள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே மிகவும் பாதுகாப்பான நகரமாக கொல்கத்தா இருக்கிறது.
இந்த லிஸ்டில் அகமதாபாத், பெங்களூர், சென்னை, கோவை, டெல்லி, காஜியாபாத், ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கான்பூர், கொச்சி, கொல்கத்தா, கோழிக்கோடு, லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா, புனே மற்றும் சூரத் என இந்தியாவின் 19 முக்கிய பெருநகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நகரங்களில் எத்தனை குற்றங்கள் பதிவானது என்பதை ஆய்வு செய்து இந்த லிஸ்ட்டை வெளியிட்டுள்ளனர்.
கொல்கத்தா
இந்த ஆய்வில், கொல்கத்தாவில் தான் மிக குறைந்த குற்றங்கள் பதிவாகி இருக்கிறதாம். ஒரு லட்சம் மக்களுக்கு 83.9 குற்றங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. இந்தியாவில் உள்ள முக்கியமான 19 பெருநகரங்களிலேயே இந்தளவுக்குக் குறைவான குற்றங்கள் கொல்கத்தாவில் தான் பதிவாவதாக என்சஆர்பி தனது அறிக்கையில் கூறியுள்ளது. அதிகபட்சக் குற்றங்களைப் பதிவு செய்யும் நகரமாக கொச்சி இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
2023ல் பதிவான குற்றங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த டேட்டா வெளியாகியுள்ளது. அதில் இந்த 19 நகரங்களின் சராசரி குற்ற விகிதம் ஒரு லட்சம் மக்களுக்கு 828ஆக இருக்கிறது. குறிப்பாக கொல்கத்தாவின் குற்ற விகிதம் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்துள்ளது. 2021இல் 103.5 ஆகவும், 2022 இல் 86.5 ஆகவும் இருந்த இந்த எண்ணிக்கை, 2023இல் 83.9 ஆகக் குறைந்துள்ளது என்று NCRB சுட்டிக்காட்டியுள்ளது.
சென்னை, கோவை எங்கே
இதில் முன்பே குறிப்பிட்டது போல 83.9 உடன் கொல்கத்தா மிகவும் பாதுகாப்பான நகரமாக இருக்கிறது. 332.3 உடன் ஹைதராபாத் இரண்டாவது இடத்தில் இருக்கும் சூழலில், 337.1 உடன் புனே, 355.4 உடன் மும்பை ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது. கோவை (409.7), சென்னை (419.8) ஆகிய இரு தமிழக நகரங்களும் முறையே 5 மற்றும் 6வது இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து கான்பூர் (449.1), காஜியாபாத் (482.6), பெங்களூர் (806.2) ஆகிய நகரங்கள் ஏழு முதல் 9 வரையிலான இடங்களில் இருக்கிறது. அகமதாபாத் (839.3) 10வது இடத்தில் இருக்கிறது.
பாதுகாப்பற்ற 10 நகரங்கள்
அதிகபட்சமாக கேரளாவின் கொச்சியில் அதிகபட்சமாக 3192.4 குற்றங்கள் பதிவாகிறது. இது நாட்டின் பாதுகாப்பற்ற நகரமாக இருப்பதாக என்சிஆர்பி டேட்டாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. தொடர்ந்து டெல்லி (2105.3), சூரத் (1377.1), ஜெய்ப்பூர் (1276.8), பாட்னா (1149.5) ஆகிய நகரங்கள் பாதுகாப்பற்ற நகரங்கள் பட்டியலில் 2 முதல் 5 இடங்களில் உள்ளது.
இந்தூர் (1111.0), லக்னோ (1015.9), நாக்பூர் (962.2), கோழிக்கோடு (886.4) ஆகிய நகரங்கள் பாதுகாப்பற்ற நகரங்களில் 6 முதல் 9 வரையிலான இடங்களைப் பிடித்துள்ளது. அகமதாபாத் நகரம் பாதுகாப்பன நகரம் மட்டுமின்றி பாதுகாப்பற்ற நகரங்களிலும் 10வது இடத்தில் இருக்கிறது. அதாவது குஜராத்தின் அகமதாபாத் நகரம் இரு பட்டியலுக்கும் இடையில் அமைந்துள்ளது.
கவனிக்க வேண்டிய விஷயம்
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் சமர்ப்பிக்கப்பட்ட காவல் துறை பதிவுகளில் இருந்து என்சிஆர்பி அமைப்பு இந்த டேட்டாவை தொகுத்து வழங்குகிறது. எனவே, இவை பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் மட்டுமே ஆகும்.. அதாவது குற்றம் நடந்து, அவை வழக்காகப் பதிவு செய்யும்போது மட்டுமே இந்த லிஸ்டில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வழக்குப்பதிவு செய்யவில்லை என்றால் இந்த லில்டில் வராது.












Click it and Unblock the Notifications