இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் 'இரட்டை இலை'க்கு பதில் பாஜகவின் 'தாமரை' சின்னத்தில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. மே 4ல் ரிசல்ட் வெளியாக உள்ளது. அதிமுக சார்பில் இன்னும் கூட்டணி கட்சிகளுடன் அதிகாரப்பூர்வமாக கூட்டணி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கவில்லை. தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

அதிமுக - பாஜக கூட்டணி கடந்த ஆண்டே உறுதி செய்யப்பட்டாலும் கூட இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. அதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இரட்டை இலைக்கு 'குட்பை'
இதற்கிடையே தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது அதிமுக கூட்டணியில் பாஜகவின் கை ஓங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் அதிமுக - பாஜக ஒரே கூட்டணியில் இருக்கிறது. இருப்பினும் அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை வகித்து வருகிறது. இந்நிலையில் தான் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் இந்த கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் கடந்த முறையை போல் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடாமல் தாமரை சின்னத்தில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிமுகவை அடக்கிய பாஜக
இது முன்னெப்போதும் இல்லாத நிலையாகும். கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக தான் கூட்டணி அமைத்து இருந்தது. இதில்ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்ற கழகம்,ஜோதி முத்துராமலிங்கத்தின் பசும்பொன் தேசிய கழகம்,என்ஆர் தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி, ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்டவை அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கின. இதனால் 191 இடங்களில் இரட்டை இலை சின்னம் போட்டியிட்டது. பாஜக 20 தொகுதிகளில் தாமரை சின்னத்திலும், பாமக 23 தொகுதிகளில் மாம்பழம் சின்னத்திலும் போட்டியிட்டது. ஆனால் இந்த முறை அதிமுகவை, பாஜகவை அடக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
ஒருமித்த கருத்து
அதன்படி அதிமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளின் வேட்பாளர்களை பாஜகவின் தாமரை சின்னத்தில் களமிறக்க வேண்டும் பாஜக விரும்புகிறது. இதுதொடர்பாக பாஜக தனது விருப்பத்தை அதிமுகவிடம் முன்வைத்தது. ஆனால் அதிமுக ஒப்புக்கொள்ளவில்லை. கூட்டணியில் உள்ள அனைத்து சிறிய கட்சிகளும் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக கூறிவிட்டார். ஆனால் பாஜக தொடர்ந்து அவரை சமாதானம் செய்து வந்தது. இறுதியாக தற்போது அதிமுக - பாஜக இடையே இந்த விஷயத்தில்ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
'தாமரை'யில் எந்தெந்த கட்சிகள்?
அதன்படி வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்க உள்ளனர். பாமக மாம்பழம் சின்னத்திலும், பாஜக தாமரை சின்னத்திலும், டிடிவி தினகரனின் அமமுக குக்கர் சின்னத்திலும் களமிறங்க உள்ளது. இதுதவிர கூட்டணியில் உள்ள ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சி மட்டும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளது.
அதேவேளையில் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்பட பிற சிறிய கட்சிகள் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அதிமுகவிற்கு பின்னடைவு - பாஜகவுக்கு பாசிட்டிவ்
இது அதிமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கூட்டணி கட்சி வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அவர் அதிமுக எம்எல்ஏவாகவே கருதப்படுவார். அதிமுகவின் கொறடா உத்தரவு அவருக்கும் பொருந்தும். அதனை மீறினால் தகுதி நீக்கம் செய்யலாம். ஆனால் பாஜகவின் தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டு வென்றால் அவர் பாஜக எம்எல்ஏவாகவே கருதப்படுவார். அவர்கள் அதிமுகவிற்கு தலைமைக்கு கட்டுப்பட வேண்டாம். பாஜகவின் தலைமைக்கு மட்டுமே கட்டுப்பட வேண்டிய சூழல் உருவாகும்.
திமுகவுக்கு சாதகமாக மாறும் முடிவு
அதேபோல் தமிழகத்தை எடுத்து கொண்டால் பாஜகவின் தாமரை சின்னத்தை விட இரட்டை இலை சின்னம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. பாஜக வளர்ந்து தாமரை சின்னத்தை மக்கள் அறிந்து இருந்தாலும் கூட இரட்டை இலை சின்னம் தான் மக்கள் மனதில் நிலைத்து உள்ளது. இப்படியான சூழலில் பாஜகவின் இந்த முடிவு என்பது திமுக கூட்டணிக்கு பாசிட்வாக வாய்ப்புள்ளது.
தாமரை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக வேட்பாளர் என்று கூறி திமுக ஓட்டு சேகரித்து வெற்றி பெற முடியும். இதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் திமுகவுக்கு வரும் தேர்தலில் பிளஸ் பாயிண்ட்டாக அமையலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். இதற்கிடையே, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி இறுதி செய்வதற்காக, வியாழக்கிழமை சென்னைக்கு வருகை தரவுள்ளார்.












Click it and Unblock the Notifications