கொரோனா பாதிப்பு முடிந்த பின்னரே நீட் தேர்வு நடத்த வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு முடிந்த பின்னர்தான் நீட் தேர்வு நடத்த வேண்டும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை: கொரோனா பாதிப்பு முடிந்த பின்னர்தான் நீட் தேர்வு நடத்த வேண்டும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடு என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கம் குறைந்த பின் நீட் தேர்வு நடத்துமாறு பிரதமருக்கு நான் ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளேன் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக பள்ளி தேர்வுகளும், கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் நீட் தேர்வு, ஜேஇஇ தேர்வு நடத்துவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஹால்டிக்கெட்களும் வெளியிடப்பட்டு விட்டன.

சோனியா காந்தி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஜேஇஇ, நீட் தேர்வுகள் நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வுகளை ஒத்திவைக்க உத்தரவிடக்கோரி மாநில முதல்வர் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்று மேற்குவங்க முதல்வர் முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
மருத்தவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, தமிழக சட்டப்சபையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மசோதாக்களும் இயற்றப்பட்டன. ஆனால் அந்த மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.
தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு தயாராகி வந்த மாணவர்கள் சிலர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் ஒரு பக்கம், கடும் மழை வெள்ள பாதிப்பு என மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
நீட் தேர்வு நடத்தக்கூடாது ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தயுள்ளார். 7 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால் தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை என்று கூறியுள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரரும் இது குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வரிடம் நீட் தேர்வு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த முதல்வர், தமிழ்நாட்டில் மாணவர்களின் மன உளைச்சலுக்கு தீர்வு காணும் விதமாகவே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொரோனா தாக்கம் குறைந்தபின் நீட் தேர்வு நடத்துமாறு பிரதமருக்கு நான் ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளேன்.
தமிழகத்தில் கொரோனாவை தடுக்க கடுமையான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் அதிகளவு கொரோனா பரிசோதனைகள் செய்வதன் காரணமாக தொற்று கட்டுக்குள் உள்ளது. உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் கொரோனாவுக்கு ஆளாகும் நபர்கள் அச்சப்பட வேண்டாம். கொரோனா பாதிப்பு முடிந்த பின்னர்தான் நீட் தேர்வு நடத்த வேண்டும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடு என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications