நீட் தேர்வு: தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தொடர் போராட்டங்கள்- உருவப் படம் எதிர்ப்பு!
சென்னை: தமிழக அரசு இயற்றிய நீட் விலக்கு மசோதாவை நிராகரித்து திருப்பி அனுப்பிய ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சைதாப்பேட்டையில் இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவியின் உருவபடம் எரிக்கப்பட்டது. மேலும் ஆளுநருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவைத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு தரக் கோரி சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க மரபுப் படி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த 5 மாதங்களாக இந்த மசோதா மீது ஆளுநர் ஆர்.என்.ரவி எந்த முடிவும் எடுக்கவில்லை. இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றும் வலியுறுத்தி இருந்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்நிலையில் திடீரென தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிவிட்டார். இது மிகப் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து ஆளுநர் பதவி என்பது தேவையா என்கிற விவாதங்களும் களைகட்டி இருக்கிறது. தமிழகத்தில் நேற்று முதல் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தி.வி.க. போராட்டம்
அதேபோல் ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும் என திராவிடர் விடுதலை கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்டவை அறிவித்தன. சென்னை சைதாப்பேட்டையில் இருந்து திராவிடர் விடுதலை கழகத்தினர் அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் விடுதலை க.ராசேந்திரன் தலைமையில் ஊர்வலமாக ஆளுநர் மாளிகை நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

உருவப் படம் எரிப்பு
இப்போராட்டத்தின் போது திராவிடர் விடுதலை கழகத்தினர், ஆர்.எஸ்.எஸ் ஆளுநர் தமிழகத்திற்கு வேண்டாம், சமூகநீதி மண்ணில் மனுநீதியை நிலை நாட்டாதே, ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு? நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய் என முழக்கங்களை எழுப்பினர். அப்போது போராட்டத்தில் பங்கேற்ற சிலர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உருவபடத்தை காலணிகளால் அடித்தும் தீயிட்டும் எரித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

நாளையும் போராட்டம்
இதன் பின்னர் பேசிய விடுதலை ராசேந்திரன், ஆளுநர் சொன்ன காரணம், இந்த நீட் தேர்வை ரத்து செய்தால் ஏழை எளிய மாணவர்கள் பாதிப்படையலாம் என்பது. ஆனால் தமிழக அரசு அமைத்த ஏகே ராஜன் பரிந்துரைகளை படித்தாரா ஆளுநர்? ஆளுநர் செய்ய வேண்டிய கடமை குடியரசு தலைவருக்கு சட்டசபை தீர்மானத்தை அனுப்பி வைப்பதுதான். தமிழ்நாடு சட்டமன்ற அதிகாரத்தை விட ஆளுநர் மாளிகை அதிகாரம் பெரியது என்று காட்டுகிறது. பாஜக தமிழ்நாட்டில் வரமுடியாது என்று ராகுல் காந்தி கூறிய அடுத்த நாளே இப்படி ஆளுநர் மூலம் திருப்பி அனுப்பி காட்டுகின்றனர் என்றார். நாளை சென்னையில் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருமான தி.வேல்முருகன் தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications