ஊரெல்லாம் கருப்பட்டி காபி கடை.. ஓரிஜினல் கருப்பட்டி காபி இல்லையா.. உண்மை நிலை உங்களுக்கு தெரியுமா?
சென்னை: கருப்பட்டி காபி கடை, அய்யர் பேக்கரி மாதிரி ஊரெங்கும் பரவி கிடக்கிறது. ஆனால் அந்த அளவுக்கு கருப்பட்டி உற்பத்தி இருக்கிறதா ? என்பது குறித்து நெட்டிசன் ஒருவர் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அவர் வெளியிட்ட பதிவில் கருப்பட்டி தயாரிக்கும் முறை குறித்தும், பனை மரங்கள் குறித்தும் பதிவிட்டுள்ளார். அந்த பதிவினை அப்படியே பார்ப்போம்.
அழகானவனின் தகப்பன் என்ற பெயரில் ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: கருப்பட்டி காபி கடை அய்யர் பேக்கரி மாதிரி ஊரெங்கும் பரவி விரவி கிடக்கிறது. ஆனால் அந்த அளவுக்கு கருப்பட்டி உற்பத்தி இருக்கிறதா என கேட்டால் நான் சொல்கிற பதில் இல்லை என்பதே. 2000இல் இருந்து 2010 வரைக்கும் கருப்பட்டி விலை கிலோ 10ல் இருந்து 100 ரூபாய் கூட தொடவில்லை. சீனியின் விலை கருப்பட்டி கிலோ 10 விற்கும்போது 18ரூபாய்.

ஆனால் 2010ல் 100ல் தொடங்கிய கருப்பட்டி விலை . இப்போது புதிய கருப்பட்டி விலை 450 ரூபாய்க்கும், ஆனால் பழைய கருப்பட்டி விலை 550இல் இருந்து 600 ரூபாய் வரையிலும் விற்கிறது. இது நேரடியாக கருப்பட்டி தயாரிக்கும் ஆளிடம் இருந்து பெறப்படும் விலை.(ஆள் தொழிற்சாலை அல்ல) இவ்வளவு விலைக்கு காரணம் பனை மரம் ஏற ஆள் இல்லை.
பதநீர் சீசன் இருக்கும் வரைக்கும்தான் கருப்பட்டி காய்ச்ச முடியும். மார்ச் மாதத்தில் இருந்து மே மாசம் வரைக்கும் தான் சீசன்.. அதன்பின் ஜூன் ஜூலை ஆகஸ்ட் நுங்கு சீசன் ஆரம்பிக்கும். அதன்பின் பனம்பழம் சீசன் ஆரம்பித்து கிழங்குக்கு பதியம் போட ஆரம்பித்து விடுவோம். 5 லிட்டர் பதநீரில் 2 கிலோ கருப்பட்டி தான் காய்ச்ச முடியும். இதில் கற்கண்டு என்றால் மிகவும் கடினம்.. பருவம் பார்த்து எடுக்க வேண்டும். நிறைய பேர், அதனாலேயே அதை காய்ப்பதே இல்லை. ஆதலால் கற்கண்டு இன்னும் விலை அதிகமாக இருக்கிறது. பதநீர் காய்க்க அந்த வெப்பத்தில் தாக்கு பிடித்து நிற்க வேண்டும். இப்போது அதற்கும் ஆள் இல்லை. சரி அப்புறம் எப்படி வருடம் முழுவதும் கருப்பட்டி கிடைக்குது என்பதற்கு இனி பதில் சொல்றேன்.
கருப்பட்டி காய்ச்சவும், பதநீர் எடுக்கவும் இப்போது ஆள் இல்லை.அதனால் வியாபாரிகள் என்ன செய்கிறார்கள் என்றால், பனைமரம் உள்ள பகுதிகளை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து விடுகிறார்கள். இல்லை என்றால் பதநீர் இறக்கும் ஆட்களிடம் இருந்து பதநீரை விலை கொடுத்து வாங்கி விடுகிறார்கள். அதை குறிப்பிட்ட பருவத்தில் காய்ச்சினால் அது பல ஆண்டுகளுக்கு கெட்டுப் போகாது.நாங்க மாட்டுக்கு கழனி தண்ணிக்கு ஊற்ற இந்த வழியை பின்பற்றுவோம்.இப்போது அதே பாணியைத்தான் வியாபாரிகளும் செய்கிறார்கள். அதை கூப்பனி என சொல்வோம். ஒரு டின் கூப்பனி 15லிருந்து 20கிலோ எடை வரும்.
அதில் சீனியோ நாட்டுச்சக்கரையோ அல்லது சீனி பவுடரோ 30 முதல் 40கிலோ வரை சேர்த்து காய்ச்சலாம். கூப்பனி அடர்த்தி பொறுத்து மாறும்.சீனி சேர்த்தால் உடைத்துப் பார்க்கும்போது மினுமினுங்கும்.சீனி பவுடர் சேர்த்தால் உடைக்க கடினமாக இருக்கும். நாட்டு சர்க்கரை சேர்க்கும் போது கண்டுபிடிக்க இயலாது. நாட்டுச் சர்க்கரை மழைக்காலத்தில் கசியும் கருப்பட்டி நன்றாக சுட வைத்தால் கசியாது. கருப்பட்டியில் துவர்ப்பு சுவை இறுதியில் இருக்கும்.நாட்டுச் சர்க்கரையில் இருக்காது.புதிதாய் சுவைக்கும் அன்பர்களுக்கு இந்த விஷயம் தெரியாது. கருப்பட்டியில் பால் காபி போட முடியாது. பால் திரிந்துவிடும்.
சுக்கு மல்லி தூள் தவிர எதில் கருப்பட்டி காப்பி போட்டாலும் சீனி 20 சதவீதமாவது சேர்க்க வேண்டும் இல்லைன்னா உங்களால் குடிக்க இயலாது. நாட்டு சக்கரை கிலோ 60 ரூபாய் தான். ஆனா அதையே கூப்பனியோடு காய்க்கும் போது 300 ரூபாய் வரைக்கும் விற்க முடியும். ஏன் அதற்கு மேல் கூட விற்கிறார்கள். இடையில் இந்த யூடியூபர்ஸ் வேற சர்வ ரோக நிவாரணி,ஆர்கானிக் அப்படி இப்படி என சொல்வதால் இன்னும் வியாபாரம் அமோகமாக நடக்கிறது. உடன்குடியில் 1கிலோ 130 ரூபாயில் இருந்து கருப்பட்டி கிடைக்கிறது. அதனால் போலி கருப்பட்டி கம்பெனி முத்தையாபுரம், வட்டன்விளை, கொட்டாங்காடு, ஆறுமுகநேரி, உடன்குடி என எல்லா பகுதிகளிலும் இருக்கிறது. நம்ம ஆளுங்க பதநீர் காய்க்க 900 ரூபாய் கேட்பதால் இங்கு வடஇந்திய மக்கள் குடும்பத்தோடு பதநீர் காய்ச்சுகிறார்கள் விறகு எடுத்து போடும் பெண்களுக்கு 250 முதல் 300ரூபாய் சம்பளம் ஆண்களுக்கு 400 முதல் 600 வரை கொடுக்கப்படுகிறது தங்க இடம் இலவசம். உணவு அவர்கள் பார்த்துகொள்ள வேண்டும்.

பனை கற்கண்டு ஒரிஜினல் அதிகமா கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் விலை 1500க்கு மேல். ஆனால் அதில் ஒரிஜினல் டுபாக்கூர் கண்டுபிடிப்பது கடினம். பனை கருப்பட்டி சுக்கு மல்லி தூளில் மட்டுமே நன்றாக இருக்கும்.காபி கொட்டை தூளில் அந்த சுவை கிடைக்காது.அதனால் எங்கேனும் "ஒரிஜினல்" கருப்பட்டி கடையில் காபி குடிக்கும் முன் இதை மனதில் வைத்துக் கொள்ளவும்" இவ்வாறு அழகானவனின் தகப்பன் என்பவர் தனது பதிவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications