4 lane highway: தூத்துக்குடி டூ குமரி இனி பறக்கலாம்.. திருச்செந்தூர் வழியாக புதிய 4 வழிச்சாலை.. வேற லெவலில் மாறப்போகுது
சென்னை: தூத்துகுடியில் இருந்து திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரி வரை நான்கு வழிச்சாலை (4 lane highway) அமைய இருக்கிறது. தூத்துக்குடியில் இருந்து கடற்கரை ஓரமாக திருச்செந்தூர் வழியாக குமரி வரைக்கும் இந்த புதிய சாலை திட்டமானது அமைக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்திற்கு தூத்துக்குடி - திருச்செந்தூர் - கன்னியாகுமரி (NH-32) TTK சாலை பெயரிடப்பட்டுள்ளது.
இந்த சாலையால் தென் மாவட்டங்களில் போக்குவரத்து வசதி மேம்படுவதோடு வளர்ச்சிக்கும் பெரும் உறுதுணையாக இருக்கும் என்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை டூ தூத்துக்குடி 4 வழிச்சாலை
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை போக்குவரத்து கட்டமைப்பு இன்றியமையாததாக உள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு நாடு முழுக்க முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்து வருகிறது.
அதன் அடிப்படையில் முக்கிய நகரங்களுக்கு இடையேயான தூரத்தை குறைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் 16 வழி, 8 வழி மற்றும் 4 வழிச்சாலைகளாக மாற்றும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் சாலைகளானது அமைக்கப்பட இருக்கிறது.
இதில் குறிப்பாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் ஆரம்பித்து தெற்கே துறைமுக நகரமான தூத்துக்குடி வரைக்கு 690 கிமீ தூரத்துக்கு (NH-32) 4 வழிச்சாலை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டமானது தற்போது மேலும் நீட்டிக்கப்பட இருக்கிறது.
தூத்துக்குடி - திருச்செந்தூர் - கன்னியாகுமரி
அதாவது தூத்துக்குடியில் இருந்து கடற்கரை ஓரமாக திருச்செந்தூர் வழியாக குமரி வரைக்கு இந்த புதிய சாலை திட்டமானது அமைக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்திற்கு தூத்துக்குடி - திருச்செந்தூர் - கன்னியாகுமரி (NH-32) TTK சாலை என அழைக்கப்படுகிறது.
இந்த சாலையானது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 25 கிராமங்களையும், நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 கிராமங்கள் வழியாகவும் செல்கிறது. மொத்தம் 106.9 கி.மீ. தொலைவிற்கு இந்த சாலையானது அமைக்கப்பட இருக்கிறது. இந்த சாலை அமைக்கும் பணிக்காக மொத்தம் 853.09 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறதாம்.
எந்த வழியாக அமைக்கப்படுகிறது?
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே முடிவைத்தானேந்தல் கிராமத்தில் இந்த சாலையானது தொடங்கும். பின்னர் கட்டாலங்குளம், நட்டாத்தி, சிறுத்தொண்டநல்லூர், ஆறுமுகமங்கலம், கொட்டாரக்குறிச்சி, வாழவல்லான், சுகந்தலை, சேதுக்குவாய்த்தான். அங்கமங்கலம், நல்லூர், ஆறுமுகநேரி, அம்மன்புரம்,
மூலக்கரை, நத்தகுளம், கந்தசாமிபுரம், மேல திருச்செந்தூர், கீழ திருச்செந்தூர், குலசை, உடன்குடி, ஆதியாக்குறிச்சி, பள்ளக்குறிச்சி, படுக்கப்பத்து, திருப்பணி புத்தன்தருவை, நெல்லை மாவட்டத்தின் குட்டம், உவரி, கரைச்சுத்து புதூர், கூடங்குளம், இருக்கன்துறை 1,2, லெவிஞ்சிபுரம் வழியாக அஞ்சுகிராமத்திற்கு முன் உள்ள கருங்குளத்தில் நெல்லை - கன்னியாகுமரி 4 வழிச்சாலை திட்டத்தில் இணைக்கப்படும்.
பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அவகாசம்
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் பயண நேரம் மற்றும் பயண தூரம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் படி முதல்கட்டமாக நெடுஞ்சாலைத்துறை சாலை அமைக்கப்படும் வழித்தடம் குறித்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. 21 நாட்களுக்குள் இது குறித்து பொது மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து தான் நிலம் கையகப்படுத்துவதற்கு நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். இதன் பின்னர் வழித்தட கற்கள் பதிக்கப்படும். இந்த பணிகள் முடிந்ததும் சாலை அமைக்கும் பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையின் இந்த அறிவிப்பால் தென் மாவட்ட மக்கள் குஷியடைந்துள்ளனர்.
அசுர வளர்ச்சி பெறும் தென் மாவட்டம்
தமிழத்தில் தூத்துக்குடி மாவட்டம் தொழில்பகுதிகள் நிறைந்த மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. தற்போது அந்த மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதேபோல, உடன்குடி அனல் மின் நிலையமும் கட்டுமான பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன.
புதிதாக முக்கிய உள்கட்டமைப்புகள் உருவாகி வரும் நிலையில், தென் மாவட்ட மக்கள் நீண்ட காலம் எதிர்பார்த்த பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. அதாவது தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரிக்கு வழிச்சாலை அமைய இருக்கிறது.
இந்த சாலை பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் ராக்கெட் ஏவுதளம், அனல் மின் நிலையம் , கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவற்றிற்கு தேவையான பொருட்களை எடுத்து செல்லவும், விவாசயம் இன்றி வானம் பார்த்த பூமியாக மாறி வரும் அப்பகுதி மக்களுக்கும் புதிய தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் ஒன்றாக இருக்கும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications