புதிய நீதிமன்ற கட்டிட திறப்பு விழா! காலணியை கழற்றிவிட்டு குத்துவிளக்கு ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கட்டப்படவுள்ள 9 மாடி நிர்வாக கட்டிடத்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அடிக்கல் நாட்டினார்.
சென்னை உயர்நீதிமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுடன் முதலமைச்சர் ஸ்டாலினும் கலந்துகொண்டார்.
அந்த விழாவில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, முனிஷ்வர்நாத் பண்டாரி தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.

புதிய நீதிமன்றங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் குடியிருப்பு கட்டிடம் திறப்பு, விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் குடியிருப்பு கட்டிடம் திறப்பு, சென்னை எழும்பூரில் வணிக வழக்குகளுக்காக மட்டும் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றம் திறப்பு, உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

குத்துவிளக்கு
இந்த நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு திருப்பதி ஏழுமலையான் படம் தாங்கிய நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. முன்னதாக விழா தொடங்குவதற்கு முன்னர் மேடையில் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வு இருந்தது. அப்போது தனது ஷூவை கழற்றிவிட்டு குத்துவிளக்கு ஏற்றினார் உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் ரமணா. அவரைத் தொடர்ந்து அடுத்ததாக குத்துவிளக்கு ஏற்றிய முதல்வர் ஸ்டாலினும் தனது காலணியை கழற்றிவிட்டு குத்துவிளக்கு ஏற்றினார்.

தமிழக அரசுக்கு பாராட்டு
உயர்நீதிமன்றம் மற்றும் நீதிமன்றங்களுக்கு தேவையான உள் கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு சிறப்பாக செய்து கொடுத்து வருவதாக கூறிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி தமிழக அரசை இதற்காக பாராட்டினார். அவரைத் தொடர்ந்து பேசிய நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ், இந்திய வரலாற்றில் முக்கியமான தினம் இன்று என்றும் வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கும் தமிழக அரசுக்கு பாராட்டு எனவும் குறிப்பிட்டார்.

அதிகம் பேசவில்லை
இதனிடையே இந்த விழாவில் கலந்துகொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, தன்னுடன் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் உட்பட மற்றவர்களிடம் அதிகம் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மீது வழக்கு நிலுவையில் உள்ளதால் இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்திருந்த போதும் அவர் கலந்துகொண்டு பேசியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications