சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு? மே 1 முதல் மொத்தமாக மாறும் ரூல்ஸ்! வெளியான மிக முக்கிய அறிவிப்பு
சென்னை: வளைகுடா போர் காரணமாகச் சமையல் எரிவாயு சிலிண்டர், அதாவது எல்பிஜ தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலைமை கையை மீறிச் செல்லவில்லை என்றாலும் கூட தட்டுப்பாடு தொடர்கிறது. இதற்கிடையே கறுப்பு சந்தையில் கேஸ் விற்பனையைத் தடுக்கும் வகையில் மே 1ம் தேதி முதல் சில முக்கியமான மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளது இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
வளைகுடாவில் நேரடி தாக்குதல்கள் நின்றுவிட்டாலும் கூட இன்னும் அங்குப் போர் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. இதனால் உலகெங்கும் குறிப்பாக தெற்கு ஆசிய நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர், பெட்ரோல்- டீசல் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை கையை மீறிச் செல்லவில்லை என்றாலும் கணிசமான பாதிப்பு இருக்கவே செய்கிறது.

மே 1 முதல்
இதற்கிடையே வரும் மே 1-ம் தேதி முதல் சமையல் எரிவாயு (LPG) விநியோக முறையில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர இந்திய ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. முறையற்ற பயன்பாடு மற்றும் கறுப்புச் சந்தையில் சிலிண்டர்கள் விற்கப்படுவதைத் தடுக்க இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
புக்கிங் இடைவெளியில் மாற்றம்
இதுவரை ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்ததிலிருந்து அடுத்த சிலிண்டர் முன்பதிவு செய்ய 21 நாட்கள் இடைவெளி இருந்தால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால் மே 1 முதல் இது மாற்றப்படுகிறது. நகர்ப்புறங்களில் 21 நாட்களுக்குப் பதிலாக 25 நாட்கள் இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. அதேபோல கிராமப்புறங்களில் இந்த இடைவெளி 45 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கால இடைவெளிக்கு முன்பாக நீங்கள் சிலிண்டர் புக் செய்ய முயன்றால், சிஸ்டம் தானாகவே அதைத் தடுத்துவிடும். அதாவது இந்த இடைவெளிக்கு முன்பு உங்களால் சிலிண்டரை புக் செய்யவே முடியாது.
ஓடிபி இல்லாமல் சிலிண்டர் கிடையாது!
இனி DAC எனப்படும் டெலிவரி ஆத்தென்டிகேஷன் கோட் கட்டாயமாக்கப்படுகிறது. சிலிண்டர் டெலிவரிக்கு வரும்போது வெறும் புளூ புக் அல்லது ரசீதைக் காட்டினால் மட்டும் போதாது. சிலிண்டர் முன்பதிவு செய்தவுடன் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். சிலிண்டர் டெலிவரி செய்யும் நபரிடம் அந்த ஓடிபி நம்பரை சொன்னால் மட்டுமே சிலிண்டரை டெலிவரி செய்வார்கள். இந்த தட்டுப்பாட்டிற்கு முன்பே ஏற்கனவே 94.5 சதவீத விநியோகம் இந்த முறையில்தான் நடந்த நிலையில், இப்போது அதைக் கட்டாயமாக்கியுள்ளனர்.
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர்ச் சூழலால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதனால் ஏற்கனவே 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் விலை ₹60 வரை உயர்ந்துள்ளது. வணிக ரீதியான 19 கிலோ சிலிண்டர்களின் விலையும் குறுகிய காலத்தில் மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மே 1ம் தேதி மீண்டும் ஒரு விலை உயர்வு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
eKYC கட்டாயம்
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சிலிண்டர் வாங்குபவர்கள் அனைவரும் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரத்தை (eKYC) முடித்திருப்பது கட்டாயம். இதுவரை இ-கேஒய்சி செய்யாதவர்கள் உடனடியாக அதனை முடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு நாளொன்றுக்கு 80,000 டன் எல்பிஜி தேவைப்படுகிறது. ஆனால் உள்நாட்டு உற்பத்தி 46,000 டன்களாக மட்டுமே உள்ளது. போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைச் சமாளிக்க, அமெரிக்காவிலிருந்து ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கூடுதல் எரிவாயு இறக்குமதி செய்யப்பட உள்ளது. இருப்பினும், இவை தற்காலிக தீர்வாக மட்டுமே இருக்கும். வளைகுடாவில் அமைதி திரும்பினால் மட்டுமே பழைய நிலை திரும்பும்.
கவனம்
இப்போது கறுப்புச் சந்தையைத் தடுக்கவும், மானிய விலை சிலிண்டர்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கைகள் அவசியமானவையாக உள்ளது. நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை கேஸ் ஏஜென்சியுடன் சரியாக இணைத்துள்ளார்களா என்பதை இப்போதே உறுதி செய்து கொள்ளுங்கள்! கேஸ் தீர்ந்த பிறகு அலைய வேண்டாம்!












Click it and Unblock the Notifications