கிரைய பத்திரம்.. அதைவிடுங்க.. யுடிஎஸ் முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி.. பத்திரப்பதிவு துறையின் அதிரடி
சென்னை: அடுக்குமாடி திட்ட வீடுகள் விற்பனைக்கு, பதிவுத்துறை அறிவித்திருக்கும் புதிய நடைமுறைக்கு ஆதரவு கிடைத்து வருகின்றன. அதேசமயம் சில கோரிக்கைகளும் அரசுக்கு விடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம், புதிய குடியிருப்புகள் பதிவுக்கான முத்திரைத் தீர்வையை குறைக்க முடிவெடுத்து, அதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருந்தது.
அதன்படி, "மதிப்பு ரூ.50 லட்சம் வரையுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வையை 7 சதவீதத்தில் இருந்து4 சதவீதமாகவும், ரூ.50 லட்சம் முதல்ரூ.3 கோடி வரையிலான குடியிருப்புக்கு முத்திரைத்தீர்வையை 7சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ரூ.50 லட்சம் வரையிலான குடியிருப்பு வாங்குவோர் முத்திரைத் தீர்வை 4 சதவீதம், பதிவுக் கட்டணம் 2 சதவீதம் என 6 சதவீதம் செலுத்தினால் போதும்..

புதிய நடைமுறை: அதேபோல், ரூ.50 லட்சம் முதல்ரூ.3 கோடி வரை மதிப்புள்ள குடியிருப்பு வாங்குவோர் 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக்கட்டணம் என 7 சதவீதம் செலுத்தினால் போதும்.
இந்த சலுகை, பிரிக்கப்படாத பாக மனையுடன் பதியப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டும் பொருந்தும். மேலும், குடியிருப்புகளின் முதல் விற்பனைக்கு மட்டுமே இது பொருந்தும். மறு விற்பனைக்கு பொருந்தாது.. வரும் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது" என்று அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பினை, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு வரவேற்றுள்ளார்.. இதுகுறித்து அவர் கூறியதாவது:
அரசு வருவாய்: "ஒரு குடியிருப்பு வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் மொத்தமாக, ரூ.50 லட்சம் என்றால், முந்தைய முத்திரைத்தீர்வை, பதிவுக் கட்டணமான 9 சதவீதத்தின்படி ரூ.4.5 லட்சம் செலுத்த வேண்டும். தற்போது புதிய நடைமுறையின்படி, 6 சதவீதமாக குறைவதால் கட்டணம் ரூ.3 லட்சமாக குறையும். இதன்மூலம், பொதுமக்களுக்கு செலவு குறையும். வீடுகள் விற்பனையும் அதிகரிக்கும். அரசின் வருவாயும் உயரும்.
கட்டுமான நிறுவனத்திடமிருந்து, தனி நபருக்கு முதல் முறையாக விற்கப்படும் வீடுகளுக்கு மட்டுமே, இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதே வீடு, தனி நபரிடம் இருந்து, இன்னொரு நபருக்கு விற்கப்படும் போது, கட்டிடத்தின் மதிப்பு குறையும் நிலையில், முத்திரைத்தீர்வை, பதிவு கட்டண வகையில், 9 சதவீத தொகையை செலுத்தும் நிலை ஏற்படுகிறது. அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு, இதை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.
யுடிஎஸ் பங்கு: இந்த புதிய நடைமுறையால், கட்டுமான நிறுவனங்கள் தங்கள் பெயரில் வீடு இன்றி, நிலத்தின் பிரிக்கப்படாத பங்கில், ஒரு பகுதியை வைத்திருப்பதற்கு வழியில்லை. குடியிருப்பு திட்டங்களில், வீடு இல்லாமல் யுடிஎஸ் பங்கை வைத்து முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த நடைமுறை அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், பொது மக்களின் கருத்துகளை முறையாகவும், முழுமையாகவும் கேட்காமல், இந்த நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்படும் நிலையில், இந்த புதிய நடைமுறையால், மக்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்று அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன..
புதிய கோரிக்கை: இதற்கு நடுவில், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, முக்கிய கோரிக்கை ஒன்றை அரசுக்கு விடுத்துள்ளார்.
அதில், 3 கோடிக்கு மேல் மதிப்புள்ள பிரிபடாத பாகம் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு என்ன முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் என்கிற தெளிவுரையை வழங்கிட வேண்டும்.. ரியல் எஸ்டேட் துறையின் அடிப்படை ஆதாரமாக விளங்கும் பொது அதிகார ஆவணத்திற்கு பதிவு கட்டணம் குறைந்தபட்சம் ஒரு சதவிகிதமும், அதிகபட்சமாக ரூபாய் 50 ஆயிரமும் அறிவித்து நடைமுறைப்படுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications