சென்னையில் புதிய ரயில் பாதை? தாம்பரம் செங்கல்பட்டு மக்களுக்கு குட்நியூஸ் சொன்ன ரயில்வே
சென்னை: தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் ரயில் பாதைகள் விரிவாக்கம் செய்ய ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையில் தாம்பரம்-செங்கல்பட்டு 4-வது பாதை அமைப்பது உள்பட 5 ரயில் பாதை திட்டங்கள் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்த, ரூ.11.52 கோடி நிதியை ரயில்வே வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது.
தெற்கு ரயில்வே பாதையில் பல்வேறு ரயில் பாதைகளை விரிவாக்கம் செய்ய ரயில்வே வாரியம் விரும்புகிறது. தமிழகத்தில் பல்வேறு தொகுதி எம்பிக்கள், பொதுமக்கள், வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் புதிய ரயில் பாதைகள் குறித்து சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகின்றன.

குறிப்பாக, முக்கிய வழித்தடங்களில் பயணிகளின் தேவைகளின் அடிப்படையில் ரயில்வே வாரியம் புதிய பணிகள் குறித்து ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் தாம்பரம்-செங்கல்பட்டு (4-வது பாதை), ஜோலார்பேட்டை-கோவை (3-வது மற்றும் 4-வது பாதைகள்),கோவை-சொர்னூர் (3-வது மற்றும் 4-வது பாதை) மற்றும் அரக்கோணம்-ரேணிகுண்டா (3-வது மற்றும் 4-வது பாதை) ஆகிய ரயில் பாதை திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான கணக்கெடுப்பு மேற்கொள்ள ரயில்வே வாரியம் ரூ.11.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், தஞ்சாவூர்- திருவாரூர்- காரைக்கால் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இரட்டிப்புத் திட்டம் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே வாரியம் கணக்கெடுக்க விரும்பும் மொத்த ரயில் பாதைகளின் நீளம் சுமார் 576 கி.மீ ஆகும்.
இதில், ஜோலார்பேட்டை-கோயம்புத்தூர் பாதை 282 கி.மீ. நீளம் கொண்டது என்றும் இந்தப் பகுதியை கணக்கெடுக்க ரூ.5.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தாம்பரம்-செங்கல்பட்டு 4-வது பாதையின் நீளம் 31 கி.மீ. இதன் கணக்கெடுப்பாக ரூ.62 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதில் மிக முக்கியமான ரயில்பாதை என்றால் தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடம் தான்.சென்னை புறநகர் பகுதியான இந்த பகுதியில் மூன்று பாதைகள் தான் இருக்கிறது. தற்போது தாம்பரம் வரை 4 பாதைகள் இருக்கிறது. அதற்கு பிறகு செங்கல்பட்டு வரை மூன்று பாதைகள் தான் இருக்கிறது.
எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு ரயில்கள் செல்வதால், தாம்பரம் வரை அதிக புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டாலும், செங்கல்பட்டு வரை கூடுதல் ரயில்கள் இயக்க முடியாத நிலை இருக்கிறது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்களை இயக்கவும் செங்கல்பட்டு தாம்பரம் 4வது பாதை மிக முக்கியமாகும்.

செங்கல்பட்டு வரை இயக்கப்படும் புறநகர் ரயில்களில் தினமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். இந்த வழித்தடத்தில் பெரும்பாலான நேரங்களில் கூட்டம் நிரம்பிவழிகிறது. எனவே, பயணிகள் நெரிசலைக் குறைக்க கூடுதல்பாதை அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகம். இதையொட்டி, முதல்கட்டமாக தற்போது இந்தப்பாதையில் கணக்கெடுப்பு நடத்தஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த 4வது பாதை அமைக்கப்பட்டால், செங்கல்பட்டுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்.












Click it and Unblock the Notifications