கோவை, திருப்பூர் வழியாக புதிய வந்தே பாரத் ரயில்.. 3 மாநில பயணிகளுக்கு குட் நியூஸ்.. ரூட், டைமிங் இதுதான்
சென்னை: தமிழகம் வழியாக புதிதாக ஒரு வந்தே பாரத் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு வழியாக இந்த ரயில் கேரளாவிற்கு செல்கிறது. பயணிகள் நீண்ட நாள் எதிர்பார்த்த இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரயில் எப்போது முதல் இயக்கப்படும்? செல்லும் ரூட் உள்ளிட்ட விரிவான விவரங்களை இங்கே காணலாம்.
நாடு முழுக்க பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்களில் உள்ள சொகுசு வசதி, அதிவேகம் போன்றவையால் அந்த ரயிலில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

புதிய வந்தே பாரத் ரயில்
நாடு முழுக்க சுமார் 150 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் சென்னை - கோவை, சென்னை - நெல்லை, சென்னை - நாகர்கோவில் , சென்னை - விஜயவாடா உள்பட பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சுமார் 7.50 மணி நேரத்தில் வந்தே பாரத் சென்று விடுகிறது.
பிற எக்ஸ்பிரஸ் ரயில்கள் சராசரியாக 10 மணி நேரம் வரை ஆகிறது. மற்ற ரயில்களை விட விரைவாக செல்ல வேண்டிய ஊர்களுக்கு சென்றுவிட முடியும் என்பதால் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் சில ரூட்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்த்து வரும் நிலையில், தமிழ்நாடு வழியாக பெங்களூரில் இருந்து கொச்சிக்கு வந்தே பாரத் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே வாரியம் ஒப்புதல்
இந்த ரயிலை இயக்குவதற்கான ஒப்புதலை ரயில்வே வாரியம் கொடுத்துள்ளது. ரயில் இயக்கப்படும் நேரம், செல்லும் வழித்தடங்கள் அடங்கிய கால அட்டவணையும் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பெங்களூர் (கேஎஸ் ஆர்) - எர்ணாகுளம் சந்திப்பு (வண்டி எண் 26651) வந்தே பாரத் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பெங்களூரில் அதிகாலை 5.10 மணிக்கு கிளம்பி பிற்பகல் 1.50 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். மறுமார்க்கத்தில் எர்ணாகுளத்தில் பிற்பகல் 2.20 மணிக்கு கிளம்பி பெங்களூருக்கு இரவு 11 மணிக்கு சென்றடையும்.
சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக
பெங்களூரில் இருந்து அதிகாலை புறப்படும் வந்தே பாரத் ரயில் சேலத்திற்கு 8.13 மணிக்கு வரும். 2 நிமிடங்கள் சேலம் ரயில் நிலையத்தில் நிற்கும் இந்த ரயில் 8.15 மணிக்கு புறப்பட்டு ஈரோடு (9.00/9.05 AM), திருப்பூர் (9.45/9.47) வழியாக கோவைக்கு 10.33 மணிக்கு வந்து சேரும். 10.35 க்கு கோவையில் இருந்து கிளம்பும் இந்த ரயில் பாலக்காடு (11.28/11.30) திருச்சூர் (12.28/12.30) வழியாக எர்ணாகுளத்திற்கு சென்றடையும்.
மறுமார்க்கத்தில் கோவைக்கு பிற்பகல் 5.20 மணிக்கு வரும் ரயில் 5.23 மணிக்கு புறப்படும். திருப்பூர் (6.03/6.05 .PM),ஈரோடு (6.45/ 6.50), சேலம் (7.18 மணிக்கு வந்து சேரும் ரயில் 7.20 மணிக்கு புறப்படும்) இந்த ரயில் சேவை நவம்பர் 2-வது வாரத்தில் இருந்து துவங்கப்பட வாய்ப்பு உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன.
வந்தே பாரத் ரயிலில் உள்ள வசதிகள்
வந்தே பாரத் ரயிலில் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ளன. முழுவதும் ஏசி வசதி, ஆட்டோமெட்டிக் கதவு, பயோ டாய்லட், சார்ஜிங் வசதி, சொகுசான இருக்கைகள், விசாலமான ஜன்னல் கண்ணாடிகள், சிசிடிவி கேமராக்கள், தீ அணைப்பு கருவிகள், சாய்வு இருக்கைகள், வைபை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. விரைவில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலும் இயக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications