சொல்லித்தானே கூட்டிட்டு வந்தீங்க.. பாஜகவில் வட்டமிடும் "கழுகுகள்".. எகிறிய பிரஷர்! கையை பிசைந்த காவி
சென்னை: பாஜகவில் புதிதாக இணைந்த நிர்வாகிகள் சிலர் தங்களுக்கு பதவி வேண்டும் என்று கேட்க தொடங்கி உள்ளதாக கமலாலய வட்டாரங்கள் நம்மிடம் தெரிவிக்கின்றன.
புதிய நிர்வாகிகளை தீவிரமாக கட்சியில் சேர்க்கும் படலம் தற்போது பாஜகவில் தொடங்கி உள்ளது. பெரும்பாலான வடமாநிலங்களில் பாஜக மிகவும் வலிமையாக இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் பாஜகவில் போதுமான உறுப்பினர்கள் கூட இல்லாத அளவிற்கு அந்த கட்சி சுருங்கி போய் உள்ளது.
முக்கியமாக தேர்தல் நேரங்களில் பாஜகவின் பூத் கமிட்டிகளில் நிற்க கூட ஆள் இல்லாத அளவிற்கு மிக மோசமான நிலை தமிழ்நாட்டில் நிலவி வருகிறது.
இதனால் தற்போது பூத் கமிட்டிகளை பலப்படுத்தும் வேலைகளை பாஜக கையில் எடுத்து உள்ளது.

நிர்வாகிகள்
ஆனால் பாஜகவில் ஏற்கனவே உறுப்பினராக சேர்க்கப்பட்டு இருக்கும் நிர்வாகிகள் பலருக்கும் இன்னும் பொறுப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. பாரம்பரியமாக பாஜகவில் இருப்பவர்களும், பாஜக மீது ஈர்ப்பு ஏற்பட்டு கட்சியில் இணையும் நிர்வாகிகளும் பெரும்பாலும் பொறுப்பை கேட்க மாட்டார்கள். கட்சி தலைமையே ஏதாவது பதவி கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்வார்கள். அதுதான் பாஜகவில் வழக்கம்.

வலிமை
பாஜகவில் தேசிய தலைமை மிகவும் வலிமையாக இருப்பதால் உள்ளூர் தலைகள் பெரிதாக பதவி கேட்டு வால் ஆட்ட மாட்டார்கள். பாஜகவில் இருந்தால் எப்படியும் நமக்கு ஒரு பதவி வரும். பொறுத்திருந்தால் போதும் என்பதே பாஜக நிர்வாகிகள் பலரின் நிலைப்பாடு. ஆனால் அந்த நிலைப்பாட்டை பாஜகவில் புதிதாக இணைந்த அரசியல் தெரியாத சில நிர்வாகிகள் பின்பற்றுவது இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

உறுப்பினர் சேர்க்கை
சமீப காலமாக பாஜகவில் பல்வேறு மாவட்டங்களில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் இதுவரை அரசியலில் இல்லாத "சிலர்" கட்சியில் இணைந்தனர். முக்கியமாக பல்வேறு வழக்குகள் இருக்கும் குற்றவாளிகள், ஜெயிலுக்கு போயிட்டு வெளியில் இருக்கும் பலர் பாஜகவில் இணைந்தனர். இவர்களுக்கு அரசியல் எல்லாம் தெரியாது. தங்கள் பாதுகாப்பிற்காக பாஜகவில் இணைந்து உள்ளனர்.

பதவி
இவர்கள்தான் தற்போது கட்சிக்குள் பதவி கேட்க தொடங்கி இருக்கிறார்களாம். எங்களுக்கு ஏதாவது பொறுப்பு கொடுங்கள். வெறும் உறுப்பினர் என்று சொன்னால் மதிக்க மாட்டார்கள். போலீசிடம் சொன்னால் இது எல்லாம் வேலைக்கு ஆகாது. அதனால் ஏதாவது செயலாளர், உள்ளூர் அளவில் பொருளாளர், மாவட்ட நிர்வாகி என்று பதவிகளை கொடுங்கள் என்று நச்சரித்து வருகிறார்களாம். இவர்களுக்கு பெரிதாக அரசியல், கட்சி செயல்பாடுகள் தெரியாது.

நெருக்கடி
இதனால் மூத்தவர்களை பற்றி எல்லாம் கவலைப்படாமல் எங்களுக்கு பதவி கொடுங்கள், பதவி கொடுங்கள்.. பதவி தருவதாக சொல்லித்தானே கூட்டிட்டு வந்தீங்க என்று இவர்கள் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்களாம். கட்சியில் இருக்கும் சீனியர்கள் சிலருக்கே பதவி இல்லை. கட்சியில் புதிதாக இணைந்த பிரபலங்கள் கூட பதவி இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் மட்டும் பதவி வேண்டும் வேண்டும் என்று தொல்லை செய்து வருகிறார்களாம். இதில் ஒரு சிலருக்கு பதவி கொடுத்தால் மற்றவர்கள் பிரச்சனை செய்வார்கள். இதனால் பாஜக தலைமை நிர்வாகிகள் என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications