மதுரவாயல் - வாலாஜா சாலை சுங்கச்சாவடி விவகாரம்.. உயர்நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை விளக்கம்!
சென்னை: மதுரவாயல் - வாலாஜா நெடுஞ்சாலையில் உள்ள இரு சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டுமே நீதிமன்ற உத்தரவுப்படி வசூலிக்கப்படுகிறது என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை மதுரவாயல் - வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்காதது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நெடுஞ்சாலையை சீரமைக்கும் வரை சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டும் வசூலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து இந்த உத்தரவு மீண்டும் நீடிக்கப்பட்டது.

இந்தநிலையில் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அமர்வு முன்பு ஆஜரான தேசிய நெடுஞ்சாலை துறை வழக்கறிஞர் கார்த்திகேயன், வாலாஜா சாலையில் சாலை சீரமைப்பு பணிகள் முடிந்து விட்டதாகவும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சுங்க சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். எனவே இந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து தலைமை நீதிபதி அமர்வு இந்த மாத இறுதியில் இந்த வழக்கு விசாரணை எடுத்து கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நாடு முழுவதும் பல்வேறு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதுவும் தமிழகத்தில் விதிமுறைக்கு மாறாக அதிக சுங்கச்சாவடிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சட்டசபையில் பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு, ''தமிழ்நாட்டில் 16 சுங்கச் சாவடிகள் தான் இருக்க வேண்டும். ஆனால், 48 சுங்கச் சாவடிகள் உள்ளன. விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள அந்த 32 சுங்கசாவடிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார். சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் இல்லை என்று தமிழக அரசு கூறியது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சங்கச்சாவடிகளில் நகாய் நிறுவனம் தன்னுடைய வசூல் காலம் முடிந்த பின்பும் தொடர்ந்து அதிக கட்டணம் வசூலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. 536 கோடி செலவு செய்த அந்த நிறுவனம் 2018ஆம் ஆண்டின்படி 1098 கோடி வரை லாபம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனலும் தொடர்ந்து சுங்ககட்டணத்தை உயர்த்தி வசூல் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்று சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா குற்றம்சாட்டி இருந்தார்.












Click it and Unblock the Notifications