அதிகாலையிலேயே அதிரடி.. தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
சென்னை: பாமக பிரமுகர் திருவிடைமருதூர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள். ராமலிங்கம் கொலை வழக்கில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான மேலும் 6 பேரை பிடிக்க என்ஐஏ தீவிரமாக உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனம் மேலத்தூண்டில் விநாயகம்பேட்டை பகுதியை சேர்ந்த ராமலிங்கம். பா.ம.க. முன்னாள் நகர செயலாளர் ஆவார். இவர் கடந்த 2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவர் அப்பகுதியில் நடைபெற்ற மதமாற்றத்தை கடுமையாக எதிர்த்தன் காரணமாக கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குறிஞ்சி மலையை சேர்ந்து முகம்மது ரியாஸ், நிஜாம் அலி, சர்புதின், முகமது ரிஷ்வான், அசாருதின் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 18 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. அவர்கள் தனியாக வழக்கு பதிவு செய்து மொத்தம் 12 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் 6 பேர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வழக்கு தொடர்பாக மேலும் பல தகவல்களை திரட்டும் வகையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று தமிழகத்தில் மொத்தம் 25 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். எந்தெந்த இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்துகிறார்கள் என்பது குறித்து தகவல்கள் தெரியவில்லை.
முன்னதாக கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், திருபுவனம், ராஜகிரி , அதிராம்பட்டினம், வடக்கு மாங்குடி, திருமங்கலக்குடி உள்ளிட்ட 9 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். திருநெல்வேலி, திருப்பூர், மதுரை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நடத்தினார்கள். கடந்த ஆண்டு மொத்தம் 25 இடங்களில் சோதனை நடத்தினார்கள். அப்போது பல்வேறு விவரங்களை சேகரித்த என்ஐஏ அதிகாரிகள் தலைமறைவான குற்றவாளிகளை பிடிக்க இப்போது தீவிரமான சோதனை செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications