கிறுகிறுக்கும் பாஜக! போட்டுடைத்த நிர்மல் குமார்.. அண்ணாமலை ரகசியமாக பேசும் திமுக அமைச்சர் யார்?
கடந்த ஜனவரி மாதம் ட்விட்டர் பக்கத்தில் டாஸ்மாக் விற்பனை, கொள்முதல் தொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரை விமர்சித்திருந்தார் நிர்மல் குமார்
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர் ஒருவருடன் ரகசிய தொடர்பில் இருந்து வருவதாக கூறி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். அண்ணாமலை ரகசியமாக பேசும் அந்த அமைச்சர் யார்? அவருக்கும் நிர்மல் குமாருக்கு என்ன பிரச்சனை? விரிவாக காண்போம்.
தமிழ்நாடு பாஜக ஐடி விங் தலைவராக செயல்பட்டு வந்த சிடிஆர் நிர்மல் குமார் திடீரென இன்று மதியம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அவரது பெயரை குறிப்பிடாமலேயே கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவிட்டு விலகி இருக்கிறார்.
இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நிர்மல் குமார் தன்னை அதிமுகவில் இணைந்துக்கொண்டு இருக்கிறார்.

நிர்மல் குமார் ட்விட்டர் பதிவு
"என்னால் முடிந்த வரை பல சங்கடங்களை கடந்து கடந்த 1.5 ஆண்டுகளாக பயணித்தேன்! உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்! விடைபெறுகிறேன்." என்று ட்விட்டரில் பதிவிட்டு கட்சியிலிருந்து விலகுவது தொடர்பான காரணங்களுடன் விரிவான அறிக்கையை அவர் வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கை மேலும் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

ராஜினாமா
அதில், "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அணைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன்.

வேவு பார்க்கிறார்
என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது, சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை.

அழிவை நோக்கி கட்சி
அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்களையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம். தொண்டர்களை மதிக்காது தான்தோன்றி தனம் இவற்றுடன் "மனநலம் குன்றிய மனிதரை போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது.

2019 ஐ விட மோசம்
2019 யில் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20% கூட இல்லை அதைப்பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது, அதை உணர்த்த முயன்று என்னை போன்று பலர் தோல்வியுற்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்?

தமிழ்நாட்டிற்கே கேடு
மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களேயே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்?" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அமைச்சர் யார்?
கடிதத்தில் அண்ணாமலை ரகசியமாக ஒரு அமைச்சருடன் பேசி வருவதாக குறிப்பிட்டு இருப்பது பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் பேசி வரும் அமைச்சருடன் தான் சட்டப்போராட்டம் நடத்தி வருவதாக நிர்மல் குமார் தெரிவித்ததை வைத்து அது அமைச்சர் செந்தில் பாலாஜியாக இருக்கலாம் என்று பலரும் தெரிவிக்கின்றனர்.

மதுவிலக்குத் துறை அமைச்சர்
காரணம் கடந்த ஜனவரி மாதம் ட்விட்டர் பக்கத்தில் டாஸ்மாக் விற்பனை, கொள்முதல் தொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்து நிர்மல் குமார் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இதனை அடுத்து அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் செந்தில் பாலாஜி. இந்த வழக்கு உயர்நீதிமன்ற விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் அவரைதான் பெயர் குறிப்பிடாமல் நிர்மல் சுட்டிக்காட்டுவதாக பலர் கணித்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications