மாணவிகளை சீரழித்த.. நிர்மலா தேவிக்கு விதிக்கப்பட்ட தண்டனை முழு விவரம்!
சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பை வாசித்ததும் பேராசிரியர் நிர்மலா தேவி என்ன செய்தார் தெரியுமா? அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையின் முழு விவரம்!
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் கணிதத் துறையில் பேராசிரியையாக இருந்து வந்தவர் நிர்மலா தேவி. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் பாடம் எடுத்து வந்தார். இவருக்கு அந்த பல்கலைக்கழகத்தில் அதிக செல்வாக்கு இருந்ததாக கூறப்படுகிறது.

தேவாங்கர் கல்லூரியில் ஏழ்மை நிலையில் இருந்த மாணவிகளை நிர்மலா தேவி தொடர்பு கொண்டு அவர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி முக்கிய புள்ளிகளுக்கு விருந்தாக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது ஒரு மாணவியை சமாதானம் செய்ய நிர்மலா தேவி பேசிய ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த ஆடியோ கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியையே இப்படி அவர்களை பாழும் கிணற்றில் தள்ளிவிட முயற்சிப்பதா என தமிழகமே அதிர்ச்சி அடைந்தது. நிர்மலா தேவியிடம் விசாரணைக்கு சென்ற போது அவர் தனது வீட்டுக்குள் பூட்டிக் கொண்டு போலீஸாருக்கு ஆட்டம் காட்டினார்.
பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்த நிர்மலா தேவியை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த விவகாரத்தில் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மேலும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது.
வழக்கில் சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த முருகனும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேர் மட்டுமே குற்றவாளிகள் என இறுதி செய்யப்பட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு இந்த வழக்கில் 1,160 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸார் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி மேற்கண்ட மூவருக்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் நேற்றைய தினத்திற்கு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்தனர். நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பை வாசிக்கையில் மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக, முருகன், கருப்புசாமி ஆகியோருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் ஏதும் இல்லை. எனவே அவர்கள் இருவரையும் இந்த கோர்ட் விடுதலை செய்கிறது என்று கூறிய பகவதி அம்மாள் நிர்மலா தேவி குற்றவாளி என்றும் அவருக்கான தண்டனை விவரங்கள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நேற்றைய தினமே நிர்மலா தேவி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் அவர் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இன்றைய தினம் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். சுமார் 1000 பக்கங்களுக்கு மேல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தண்டனை விவரங்களை நீதிபதி பகவதி அம்மாள் வாசித்தார்.
அப்போது நிர்மலா தேவிக்கு எதிராக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் இரு பிரிவுகளில் தலா 10 ஆண்டுகள், ஒரு பிரிவில் 7 ஆண்டுகளும், மற்றொரு பிரிவில் 5 ஆண்டு , மற்றொரு பிரிவில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதாவது 35 ஆண்டுகள் விதிக்கப்பட்ட நிலையில் அனைத்தையும் ஏக காலத்தில் 10 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நிர்மலா தேவிக்கு ரூ 2.47 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தண்டனை குறைவாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்தாரா என தெரியவில்லை, நீதிபதி 10 ஆண்டுகள் சிறை என்றதுமே நிர்மலா தேவியின் முகம் வாடியது. இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படுமா என்பது குறித்து தெரியவில்லை.












Click it and Unblock the Notifications