வர மறுத்த நிதிஷ்; முர்மு! பச்சைக் கொடி காட்டிய ராஜ்நாத்சிங்: திமுக அணி மாற்றமா?
சென்னை: முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழாவுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் அழைக்கப்பட்டது ஏன்? அதற்குப் பின்னால் என்ன அரசியல் இருக்கிறது என்பது பற்றி ரவீந்திரன் துரைசாமி சில கருத்துகளை முன்வைத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவாக 100 ரூபாய் நாணயத்தை நாளை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிடுகிறார். இந்த விழா குறித்து முதல்வர் ஸ்டாலின், 'கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் அவரது புகழ் மகுடத்தில் மற்றொரு வைரம்' என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

எதிரும் புதிருமாக அரசியல் களத்திலிருந்து வந்த திமுக மற்றும் பாஜக இந்த விழாவின் மூலம் ஒரு சுமுகமான உறவை எட்டி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 'திமுக ஃபைல்' மூலம் ஊழல் பட்டியலை வெளியிட்டு ஆளுநர் வரை புகார் கொடுக்க சென்று எதிர் அரசியல் நடத்தி வந்த அண்ணாமலை இந்த விழாவில் பங்கேற்க இருக்கிறார். அதற்காக முதல்வர் ஸ்டாலினே தன்னை தொலைபேசியில் அழைத்ததாக அண்ணாமலையே கூறி இருக்கிறார்.
மேலும், '100 ஆண்டுக்கால சாதனையின் அடையாளமாக இந்த நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகிறது. இதை அரசியலாக நாங்கள் பார்க்கவில்லை. கருணாநிதிக்குக் கிடைக்கவேண்டிய மரியாதை கிடைக்கவேண்டும்' என்று அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முன்னதாக அண்ணாதுரை மறைந்த ஒரு ஆண்டு கழித்து 1970இல் அவரது நினைவாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 2009இல் குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி, அண்ணாதுரையின் உருவம் பொறித்த 5ரூபாய் நாணயத்தைத்தான் வெளியிட்டிருந்தார். அதில் அண்ணாவின் கையெழுத்தில் இடம்பெற்றிருந்தது. அப்போது திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியிலிருந்தது. ஆகவே, பிரணாப் முகர்ஜியை திமுகவினால் அழைத்து வர முடிந்தது.

இதற்கு முன்னதாக கடந்த 5 ஆண்டுகள் முன்னதாக வாஜ்பாய் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாகக் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வாஜ்பாயின் 100 ரூபாய் நாணயத்தைப் பிரதமர் மோடி வெளியிட்டார். அந்த நாணயம் 35 கிராம் எடைகொண்டிந்திருந்தது. நாணயத்தில் கீழாக வாழ்ந்த காலகட்டத்தைக் குறிக்கும் வகையில் 1924-2018 என எழுதப்பட்டிருந்தது. இப்போது வாஜ்பாய்க்கு நிகராக கருணாநிதிக்கும் 100 ரூபாய் நாணயத்தை திமுக வெளியிட முன்வந்துள்ளது. இந்த நகர்வு அல்லது மாற்றத்தை அரசியல்ரீதியாக எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்றே பலரும் கூறுகின்றனர்.
ஏனெனில் கலைஞர் நூற்றாண்டை ஒட்டி கிண்டியில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் முர்முவை அழைத்தது திமுக. அவரும் வருவதாக உறுதி மொழி அளித்துள்ளதாக திமுக தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், இறுதியில் அவர் விழாவுக்கு வருவது ரத்து செய்யப்பட்டது. அதற்கு பாஜக மற்றும் திமுக இடையேயான மோதல் போக்கே காரணம் என்றும் பலரும் கூறினர்.
அதேபோல கடந்த ஆண்டு ஜனவரியில் கலைஞர் கோட்டம் திருவாரூரில் திறக்கப்பட இருந்தது. அதற்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அழைக்கப்பட்டிருந்தார். அவர்தான் திறப்பு விழா செய்வதாக இருந்தது. இறுதியில் அவர் உடல்நலக் காரணங்களைக் கூறி, நிகழ்ச்சியில் பங்கேற்பதைத் தவிர்த்தார். இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் திமுகவுக்குப் பலத்த ஏமாற்றத்தை அளித்தது.
நிதிஷ்குமார் எமர்ஜென்சி காலத்தில் ஜெயப் பிரகாஷ் நாராயண் உடன் பணியாற்றியவர். கருணாநிதியை அந்தக் காலகட்டத்திலிருந்து அறிந்தவர். அவர் நிகழ்ச்சியை ரத்து செய்த கையோடு பாஜக கூட்டணி பக்கம் தாவினார். அந்த நகர்வுக்காகத்தான் திமுக கூட்டத்தை அவர் தவிர்த்தார் என்று பின்னால் ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது.
இப்போது இந்தக் கருணாநிதி 100 ரூபாய் நாணயம் வெளியிட்டு விழாவை நடத்தி தேசிய அளவில் அவரது புகழை நிலைநாட்ட திமுக விரும்புகிறது. இப்போது முன்பு போல பாஜக பெரும்பான்மையுடன் இல்லை. எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்ற திரிசங்கு நிலையில் மோடியின் ஆட்சி உள்ளது. பல மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் தயவில் நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. அதை உணர்ந்துதான் பாஜக மனம் மாறி திமுக பக்கம் சாய்கிறது என்கிறார்கள். அண்ணாமலையும் கருணாநிதிக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என்கிறார்.
திமுக வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியிலிருந்தபோது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாடஸ் உடன் நல் உறவை வைத்திருந்தது. வாஜ்பாய் அமைச்சரவையில் வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த போது கருணாநிதியை அறிந்தவர் ராஜ்நாத் சிங். ஆகவேதான் அவரை இந்த விழாவுக்கு திமுக அழைத்துள்ளது.

திமுகவின் இந்த மனம் மாற்றம் பற்றி அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி சில விசயங்களை முன்வைத்துள்ளார், அவர், "நாடாளுமன்றத்தில் 22 எம்பிகளுடன் ஒரு முக்கிய தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். கடந்த மூன்று தேர்தல்களில் தொடர்ச்சியாக அவரது அணி வெற்றி பெற்றுள்ளது. அப்படிப்பட்ட திமுகவின் முக்கிய தலைவராக இருந்தவர் மு.கருணாநிதி. அவருக்கான முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும் என மத்திய அரசான பாஜக நினைக்கிறது. திமுகவின் 22 எம்பிகளால் பாஜகவுக்கு எந்தப் பலனும் இல்லை என்பதை உணர்ந்தேதான் இந்த நாணயம் வெளியிடுவதற்கு முன்வந்துள்ளார்கள். திமுகவுக்கு பாஜகவுடன் எந்த விசயங்களில் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும்? எந்த விசயங்களில் அந்த மோதலை தவிர்க்க வேண்டும் என்பது தெரியும்.
அதனால்தான் நாணயம் வெளியிடும் நிகழ்ச்சிக்கு மத்திய அரசின் பங்கேற்பு இருக்க வேண்டும் என விரும்புகிறது திமுக. கடந்த 2019 பாஜகவை இப்போது எதிர்ப்பதைவிடக் கடுமையாக திமுக எதிர்த்துள்ளது. அது ஒரு அரசியல் நிலைப்பாடு. அதை பாஜகவும் புரிந்துகொண்டுள்ளது" என்கிறார்.












Click it and Unblock the Notifications