நெருங்கும் லோக்சபா தேர்தல்.. தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பறந்த பெரிய உத்தரவு
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், தேர்தல் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக 20 கட்டுப்பாடுகள் மாவட்ட மேலாளர்கள் (டாஸ்மாக் நிர்வாகம்) சார்பில் விதிக்கப்பட்டிருக்கிறது.. அவற்றை பார்ப்போம்
லோக்சபா தேர்தல் நெருங்கும் போது, பல்வேறு கட்சி நிர்வாகிகள் பிரச்சாரத்தில் பங்கேற்போருக்கும், கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்போருக்கும் மொத்தமாக மதுபானங்களை வாங்கி விநியோகிப்பது வழக்கமாக உள்ளது. அதேபோல் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு மதுபாட்டிகல்களை பெட்டி பெட்டியாக வாங்கி வந்து, இலவசமாக வாக்காளர்களுக்கு விநியோகிப்பதும் நடக்கிறது. இதை தடுக்க எத்தனை முயற்சிகள் செய்தாலும் , நடைமுறையில் இயலாத ஒன்றாக உள்ளது. எனினும் டாஸ்மாக் கடைகளில் இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை பார்ப்போம்

1. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள காலங்களில் டாஸ்மாக் கடைகளில் 50 சதவீதத்துக்கு மேல் மது வகைகள் இருப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
2. மது விற்பனை கடந்த ஆண்டை விட ஒப்பிடுகையில் 30 சதவீதத்துக்கு அதிகமாக இருந்தால் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தும். எனவே கடையின் சராசரி விற்பனை 30 சதவீதத்துக்கு மேற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
3. மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
4. அரசு அனுமதித்த மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் இயங்க வேண்டும்.
5. 'டாஸ்மாக்' பார்களில் மதுபானம் இருக்க கூடாது. அப்படி இருந்தால் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
6. 'டாஸ்மாக்' கடைகள் மற்றும் பார்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அவற்றின் காட்சி பதிவுகள் கண்காணிக்கப்பட வேண்டும்.
7. விற்பனை செய்யப்படும் மது வகைகளுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்.
8. கடையில் உள்ள 21 பதிவேடுகளையும் தினசரி முறையாக பராமரிக்க வேண்டும்.
9. மதுபானங்கள் விற்பனையை பணமில்லா பரிவர்த்தனை மூலம் ஊக்கப்படுத்த வேண்டும்.
10. டோக்கன் மற்றும் கூப்பன்களுக்கு மதுபானங்களை கண்டிப்பாக விற்பனை செய்யக்கூடாது.
11. அனுமதியின்றி பார்கள் செயல்பட்டால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
12. மதுக்கடைகள் அருகே அண்டை மாநில மதுபானங்கள், போதை வஸ்துகள் விற்பனை செய்தால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
13. கடை பணியாளர்கள் அடையாள அட்டை அணிந்து பணிபுரிய வேண்டும்.
14. 21 வயதுக்கு குறைவான நபர்களுக்கு மதுபானங்களை விற்கக்கூடாது.
15. மதுக்கடைகள் மற்றும் பார்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
16. தினந்தோறும் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் விற்பனை புள்ளிக்கும், வங்கியில் செலுத்தப்படும் விற்பனை தொகைக்கும் வேறுபாடு இருக்க கூடாது.
17. முன்னுரிமை அடிப்படையில் முதலில் வரும் மது வகைகளை விற்பனை செய்ய வேண்டும்.
18. 90 நாட்களுக்கு மேற்பட்ட மதுபானங்கள் கடைகளில் இருப்பு இருக்க கூடாது.
19. வாடிக்கையாளர்களிடம் கடுஞ்சொற்களை பயன்படுத்தி விவாதத்தில் ஈடுபட கூடாது. கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்.
20. மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது.
இவ்வாறு டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications