11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் வருகிறதா? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன பதில் இதுதான்
சென்னை: தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையை கைவிட வேண்டும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தேர்வு நடைமுறையில் மாற்றம் இருக்குமா? என செய்தியாளர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்டனர். அதற்கு அமைச்சர் பதிலை பார்க்கலாம்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த இரு தினங்களாக ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். குறிப்பாக கடந்த 22 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி துவங்கி நள்ளிரவு 12.30 மணி வரையிலும் தொடர்ந்து ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். சுமார் 10 மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனையின் போது ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டு அறிந்து கொண்டார். அதைத் தொடர்ந்து தொடக்க கல்வியின் கீழ் வரும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்பழகன் கல்வி வளாகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, இயக்குனர் அறிவொளி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆசிரியர் சங்கங்களின் பிதிநிதிகள் பள்ளி மாணவர்கள் நலன் குறித்து ஆசிரியர் நலன் சார்ந்த கோரிக்கைகள் குறித்தும் பேசினர். இதையடுத்தும் அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக்கொண்டர். இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் 9 மணி நேரம் நடைபெற்றது.
இந்தக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:- கடந்த இரு நாட்களாக ஆலோசனைக் கூட்டத்தில் ஆசிரியர் சங்கங்கள் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்த கருத்துக்களை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம். நிதிச்சுமை இல்லாத கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.
நிதி சுமை சார்ந்த கோரிக்கைகளுக்கு எப்படி தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் நிதி அமைச்சருடன் ஆலோசனை நடத்த இருக்கிறோம். பள்ளி கல்வித்துறையில் பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதையும் சட்டத்துறையுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறையில் இப்போது வரை எந்த மாற்றமும் கிடையாது. பொதுத்தேர்வு நடைபெறும் என்ற வகையில்தான் தற்போதும் இருக்கிறது. ஆசிரியர் சங்கங்கள் உடன் பகிரப்பட்ட கருத்துகள் அனைத்தும் மாநில கல்வி கொள்கை குழுவிடம் வழங்கப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications