அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பமா.. ஒரே புள்ளியில் இருக்கோம்.. சொல்கிறார் அண்ணாமலை!
நாமக்கல்: அதிமுக - பாஜக இடையிலான கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒரே புள்ளியில் இணைந்து செயல்படுவதாகவும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் யார் தலைமையிலான கூட்டணி, யார் தலைமை, முதல்வர் வேட்பாளர் யார் என்பதையெல்லாம் அறிவித்துவிட்டோம் என்றும் கூறியுள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்ட நாளில் இருந்தே, தேர்தலில் வென்றால் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி வருகிறார். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ, தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று பதில் அளித்து வருகிறார். இது தொடர் விவாதமாக நடந்து வருகிறது.
இதனிடையே அண்ணாமலை ஒருபடி மேல் சென்று, அதிமுக - பாஜக ஆட்சியை பாஜக ஆட்சி என்றே கூறுவேன் என்று அதிர்ச்சி கொடுத்தார். இதனால் அதிமுக - பாஜக தொண்டர்களிடையே இணக்கமாக செயல்பட முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் அண்ணாமலை பேசுகையில், அமித்ஷா கூட்டணி ஆட்சி என்பதை 3 முறை தெளிவாகச் சொல்லிவிட்டார். அவர் சொன்னதை நான் எப்படி மாற்றிக் கூற முடியும்?

அதிமுகவுக்கு மாற்றுக் கருத்து இருந்தால், அமித்ஷாவிடம் பேசி முடிவு எடுக்கலாம் என்று கூறி இருக்கிறார் என்று மீண்டும் பந்தை அதிமுக பக்கம் அனுப்பினார். எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சந்திப்பு பயணம் மூலமாக அதிமுகவுக்கு மக்கள் மத்தியிலான செல்வாக்கு திரும்பிய போது, அண்ணாமலை மீண்டும் கூட்டணி ஆட்சி என்று பேசுவது அதிமுகவை பின்னுக்கு இழுப்பதாக பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இன்னும் சில மாதங்களுக்கு இதே நிலை தொடர்ந்தால், அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துவிடும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசுகையில், அதிமுக - பாஜக இடையில் எந்த சர்ச்சையும், குழப்பமும் கிடையாது. அனைவரின் கருத்துக்களும் பொதுவெளியில் வைக்கப்பட்டுவிட்டது.
திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற ஒரே புள்ளியில் அதிமுக - பாஜக இணைந்துள்ளோம். வரும் காலத்தில் எப்படி இருக்க வேண்டும், தேர்தலுக்கு முன் எப்படி இருக்க வேண்டும், தேர்தலுக்குப் பின் எப்படி இருக்க வேண்டும் என்பதை இரு கட்சிகளின் தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். 2 நாட்களுக்கு முன் நான் பேசியது எங்களின் தலைவர்கள் பேசியதைத்தான். அதில் சர்ச்சையோ, குழப்பமோ இல்லை.
அனைவரும் கட்சி நடத்துவது ஆட்சிக்கு வருவதற்காகத் தான். 2026ல் யார் தலைமையிலான கூட்டணி, யார் தலைமை, முதல்வர் வேட்பாளர் என்றெல்லாம் அறிவித்துள்ளோம். அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து அறிவித்தார்கள். 2026 தேர்தலைப் பொறுத்தவரை எந்த குழப்பமும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications