துணை முதலமைச்சர் பதவி பற்றி இன்று ஆலோசிக்கப்பட்டதா? திமுக மா.செக்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி அமெரிக்கா செல்ல இருப்பதால், அதற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வந்தன. இந்நிலையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் பதவி பற்றி பேசப்பட்டதா? என ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பில் விளக்கியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாவட்ட செயலாளா்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசுகையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தோ்தல் வெற்றிக்கு அயராது உழைத்த கட்சி நிர்வாகி மற்றும் தொண்டா்களுக்கு நன்றி தொிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்தாலும் கட்சியையும், ஆட்சியையும் கவனித்துக் கொண்டே தான் இருப்பேன். திமுகவை சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் வந்திருக்கின்றன. மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார். மேலும், ஆலோசனை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுக மாவட்ட செயலாளா்கள் கூட்டத்திற்கு பிறகு திமுக அமைப்பு செயலாளார் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றியவர்களுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும் முதல்வர் வெளிநாடு செல்வதற்கு முன்பாக கட்சி நிர்வாகிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகள் மாவட்ட செயலாளருக்கு வழங்கப்பட்டது எனத் தெரிவித்தார்.
மேலும், நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் 40க்கு 40 வெற்றி பெற்றதால் மமதையில் இருக்க கூடாது என கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறினார். மக்கள் பணிகளை துரிதமாக, சிறப்பாக நடத்த கட்சி நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார் எனத் தெரிவித்தார் ஆர்.எஸ்.பாரதி.
அமெரிக்காவில் இருந்தாலும் அரசையும், கட்சியையும் கவனிப்பேன்.. மா.செக்கள் கூட்டத்தில் ஸ்டாலின் மெசேஜ்!
மேலும் இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஆர்.எஸ்.பாரதி,, திமுகவுக்கு எதிராக அதிமுக தீர்மானங்கள் நிறைவேற்றுகிறது என்றால் நாங்கள் சரியாக பணி செய்கிறோம் என்று அர்த்தம் எனத் தெரிவித்தார்.
மேலும், துணை முதலமைச்சர் பற்றி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எந்த வித ஆலோசனையும் நடைபெறவில்லை எனத் தெரிவித்தார் ஆர்.எஸ்.பாரதி. அதோடு, திமுகவின் முப்பெரும் விழாவில் சென்னையில் எங்கு நடைபெறுகிறது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
முன்னதாக வரும் 27ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ளதால் இன்று துணை முதல்வர் பற்றிய ஆலோசனை இருக்கும் எனக் கூறப்பட்டது. துணை முதல்வர் பற்றிய கோரிக்கைகள் குறித்த கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பு செய்தியாளர்களின் பேசுகையில், “கோரிக்கைகள் வலுத்து வருகிறதே தவிர பழுக்கவில்லை.” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications