"தங்கம், வெள்ளி விலை உயர்வை கட்டுப்படுத்த பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை” - பிரேமலதா விமர்சனம்!
சென்னை: பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிறைகளும் குறைகளும் இருப்பதாக, இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். தங்கம், வெள்ளி விலை உயர்வை கட்டுப்படுத்த அறிவிப்பு இல்லை. யானை பசிக்கு சோளப்பொறி தான் இந்த பட்ஜெட் என அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் 9வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு பொதிகை மலையில் சூழல்நட்பு மலையேற்ற திட்டங்கள், பழவேற்காடு ஏரியில் பறவை கண்காணிப்பு மையம், சென்னை - பெங்களூரு மற்றும் சென்னை - ஹைதராபாத் இடையே அதிவிரைவு ரயில் தடம், ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம், மற்றும் அரிய வகை கனிமங்களுக்கான வழித்தடத் திட்டம் ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளன.

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு சில நன்மைகள் இருந்தாலும், சில முக்கிய அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "தேர்தலை நோக்கி வருகின்ற இந்த பட்ஜெட் மிக மிக முக்கியமான ஒரு பட்ஜெட். ஒன்பதாவது முறையாக ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன். பெண் நிதி அமைச்சருக்கு என்னுடைய வாழ்த்துகள். தமிழ்நாட்டிற்கு சென்னை- கோயம்புத்தூர், சென்னை - கொல்கத்தா போன்ற நிறைய ரயில்வே டிராக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கு 40,000 கோடி பயோ ஆர்கானிக் திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. சாலை வசதி, இன்ஃப்ராஸ்ட்ரக்சருக்கு பல ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜவுளிகளுக்கு பூங்காக்கள் அமைக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பம், ஐடி இண்டஸ்ட்ரீஸ் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்றவைகளை எல்லாம் வரவேற்கிறேன்.
தமிழ்நாட்டில் நதிகள் இணைப்பு, நீர் மேலாண்மை பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. ஜிஎஸ்டி, டிடிஎஸ் போன்ற வரிகளுக்கு விலக்கு இல்லை. இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த எந்த அறிவிப்பும் இல்லை. விலைவாசியை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. தங்கம், வெள்ளி விலை உயர்வை கட்டுப்படுத்த அறிவிப்பு இல்லை. யானை பசிக்கு சோளப்பொறி தான் இந்த பட்ஜெட்." எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “தேமுதிக தனித்து நின்று தேர்தலை சந்திக்காது. நிச்சயமாக கூட்டணி அமைக்கும். தமிழ்நாட்டில் மூன்றாவது அணி பற்றி இப்போது சொல்ல முடியாது. விஜய் மீதான அதிமுகவின் தாக்குதல் பற்றி விஜய் தான் பதில் சொல்ல வேண்டும். கூட்டணி பேச்சுவார்த்தை கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்து பேசித்தான் முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications