பட்டா மாறுதல் செய்றீங்களா? வட்டாட்சியர் அலுவலகம் செல்லாமல் ஆன்லைனில் 15 நாளில் கிடைக்க புதிய லிங்க்
சென்னை: தமிழக வருவாய்த்துறையில் நிலம் தொடர்பான ஆவணங்களை பெறுவதில் இருந்த காலதாமதத்தை முற்றிலும் தவிர்க்கும் வகையில், நம்முடைய அரசு தற்போது ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.. குறிப்பாக, பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் பொதுமக்கள் இனி வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று அதிகாரிகளுக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.. இதுவரை நடைமுறையில் இருந்த மேனுவல் எனப்படும் காகிதக் கோப்புகள் முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, நூறு சதவீதம் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது.. அதை பற்றிதான் இங்கே சுருக்கமாக பார்க்க போகிறோம்...!!
பொதுவாக சொத்து வாங்க முயல்பவர்கள், குறிப்பாக ஒரு நிலத்தை வாங்கிய பிறகு அதன் பட்டாவை தன் பெயருக்கு மாற்றுவது என்பது மிகப்பெரிய சவாலாகவே இதுவரை இருந்து வந்தது.. கிராம நிர்வாக அலுவலர் முதல் வட்டாட்சியர் வரை பல கட்டங்களைத் தாண்ட வேண்டியிருந்ததால், பல மாதங்கள் இதற்காக பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது..

ஆன்லைன் பட்டா மாறுதல்
ஆனால், இப்போது அப்படி கிடையாது.. நம்முடைய அரசு பொதுமக்களின் வசதிக்காக புதிய டிஜிட்டல் நடைமுறையை கொண்டு வந்துள்ளது. அதுதான் மேனுவல் எனப்படும் காகிதக் கோப்புகள் முறை ஆகும்..
நில உரிமையாளர்கள் தங்கள் வீட்டிலிருந்தே அல்லது அருகில் உள்ள பொதுச் சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்து, வெறும் 15 நாட்களுக்குள் பட்டா மாறுதல் ஆணையைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.. இந்த அதிரடி மாற்றமானது நிலம் வாங்குபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
மேனுவல் முறை கிடையாது
இந்த நடைமுறையில், நீங்கள் நிலத்தை பதிவு செய்த உடனேயே அந்தத் தகவல் தானாகவே வருவாய்த்துறைக்கு சென்றுவிடும்.. எந்த நேரத்திலும் பட்டா (Anytime Patta) என்ற இணையதள வசதி மேம்படுத்தப்பட்டுள்ளதால், உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல்களை மிக எளிதாக ஆன்லைனிலேயே முடிக்க முடியும்..
அதேபோல், உட்பிரிவு செய்ய வேண்டிய நிலங்களுக்கும் ஆன்லைனிலேயே கட்டணம் செலுத்தி நில அளவையாளரை (Surveyor) வரவழைக்கும் வசதியும் எளிமையாக்கப்பட்டுள்ளது.. இதற்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் எந்த ஒரு கோப்பையும் நேரில் சமர்ப்பிக்க வேண்டிய தேவை இனி கிடையாது..
வட்டாட்சியர் அலுவலகம் போக வேணாம்
மிக முக்கியமான விஷயம், ஊழலை தவிர்க்கும் நோக்கில் அதிகாரிகளின் டிஜிட்டல் கையொப்பம் இடப்பட்ட பட்டாக்கள் மட்டுமே இனி செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டால், அது எந்த நிலையில் இருக்கிறது என்பதை விண்ணப்பதாரர் தனது செல்போன் மூலமாகவே மெசேஜ் வழியாகவே தெரிந்து கொள்ளலாம்..
ஒருவேளை 15 நாட்களுக்கு மேல் ஒரு விண்ணப்பம் தேங்கிக் கிடந்தால், அது குறித்து மேலதிகாரிகள் நேரடியாகக் கேள்வி எழுப்பவும் இந்த புதிய சாப்ஃப்ட்வேர் வழிவகை செய்கிறது..
15 நாளில் பட்டா
இதில் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், பாமர மக்களும் நில ஆவணங்களை எளிதாக அணுக வேண்டும் என்பதற்காகவே இந்தத் திட்டம் மிக எளிமையான தமிழில் வடிவமைக்கப்பட்டுள்ளது.. இதன் மூலம் இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல், நிலத்தின் உரிமையைச் சட்டப்படி உறுதி செய்வது இப்போது சாத்தியமாகியுள்ளது.. பொதுமக்கள் இந்த டிஜிட்டல் வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்கள் நில ஆவணங்களைச் சரியாகப் பராமரித்துக் கொள்ளுமாறு தமிழக அரசின் வருவாய்த்துறை கேட்டுக் கொண்டுள்ளது..!!












Click it and Unblock the Notifications