பல் போன பாட்டி முதல் பல் முளைக்காத குழந்தை வரை திமுக அரசில் பாதுகாப்பு இல்லை: நடிகை விந்தியா பொளேர்
சென்னை: கோவையில் நடைபெற்ற அதிமுக மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு பேசிய நட்சத்திரப் பேச்சாளர் விந்தியா, திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் தனது பாணியில் மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளரான நடிகை விந்தியா எடப்பாடி பழனிசாமி பற்றியும் பாராட்டி பேசியிருக்கிறார். நடிகை விந்தியாவின் இந்த பேச்சுதான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
நடிகை விந்தியா பேசும்போது, "ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மக்கள் நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் இந்த 5 ஆண்டுகளில் நாங்கள் மிகப்பெரிய சாதனைகளை செய்துள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடைதோறும் முழங்கி வருகிறார்..

நடிகை விந்தியா
அவர் அப்படி என்னதான் சாதனைகளை செய்துவிட்டார் என்று நான் ஆழமாக யோசித்துப் பார்த்தேன்.. இந்தியா சுதந்திரம் அடைந்த இந்த 79 ஆண்டு கால வரலாற்றில், எந்த ஒரு அரசும் வெறும் 5 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியது கிடையாது.. ஆனால், இந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் 6 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருப்பதுதான் இவர்களுடைய மிகப்பெரிய சாதனையாக இருக்கிறது.
பெருந்தலைவர் காமராஜர் காலம் தொடங்கி அண்ணன் எடப்பாடியார் காலம் வரையிலான ஆட்சியில், மாணவர்கள் ஒழுங்காகப் பள்ளிக்குச் சென்று படித்து வந்தார்கள்.. ஆனால் இந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் மாணவர்கள் போதையில் சுற்றித் திரிகிறார்கள்.. அவர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது.. இதுதான் இந்த விடியா அரசின் சாதனையா?
திமுக அரசு மீது பாய்ச்சல்
இத்தகைய சாதனைகளைச் செய்த பெருமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையே சாரும்.. இதற்கு மேலேயும் தமிழகத்தில் திமுக ஆட்சி தொடர்ந்தால், திமுக வேண்டுமானால் இருக்கும், ஆனால் தமிழ்நாடு என்ற மாநிலமே இருக்காது.
திமுக ஆட்சியில் பல்லு முளைக்காத பச்சிளம் குழந்தை முதல் பல்லு போன மூதாட்டி வரை யாருக்கும் கொஞ்சமும் கூட பாதுகாப்பு இல்லை. இத்தகைய அவலமான சூழ்நிலை நிலவும் போது, தமிழகத்தில் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக முதலமைச்சர் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது..
வெல்லும் பெண்கள் என்ற பெயரில் எந்தவிதமான வெட்கமும் இல்லாமல் இந்த ஆட்சியாளர்கள் விளம்பரம் தேடி வருகிறார்கள்.. மக்கள் நலனை விட விளம்பரம் தேடுவதிலேயே இவர்கள் குறியாக இருக்கிறார்கள்.. இன்று திமுக ஆட்சியில் இருப்பதற்கு முக்கியக் காரணமே பெண்கள்தான்.. ஆனால், அந்தப் பெண்களுக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத நிலைதான் நீடிக்கிறது.
அண்ணன் எடப்பாடி தலைமையிலான அரசு
கடந்த முறை தேர்தலின் போது எத்தனையோ பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி, மக்களை ஏமாற்றி எப்படியோ ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்.. இந்த முறையும் அதேபோல் கட்டுக்கட்டாகப் பொய்களைத் தூக்கிக்கொண்டு உங்கள் முன் வருவார்கள்.. தயவுசெய்து யாரும் அவர்களை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்..
திமுகவினருக்கு உண்மையான விஷயங்களை பேச தெரியாது.. நேருக்கு நேர் நின்று சண்டை போடுவதற்கு திமுகவுக்கும் தெரியாது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் தெரியாது" என்று பேசினார்..
எடப்பாடியாரின் தலைமையிலான அதிமுகவின் வலிமையையும், திமுக அரசின் மெத்தன போக்கையும் ஒப்பிட்டு விந்தியா பேசிய இந்தப் பேச்சு கூட்டத்தில் அதிமுக தொண்டர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது..!!












Click it and Unblock the Notifications