“எங்களை யாரும் மிரட்ட முடியாது.. கூட்டணியில் இணைய அன்போடு அணுகி வருகிறார்கள்" - டிடிவி தினகரன்
சென்னை: "எங்களை யாரும் மிரட்ட முடியாது, அமமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று அன்போடு அணுகி வருகிறார்கள். அமமுகவும் சரி, டிடிவி தினகரனும் சரி, எத்தனையோ சோதனைகளை கடந்து வந்திருக்கிறோம். எங்களை யாரும் மிரட்ட முடியாது" என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், "அமமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று அன்போடு அணுகி வருகிறார்கள். நாங்கள் எங்காவது போய் வந்தால் உடனே மிரட்டுகிறார்கள் எனச் சொல்வதா? அமமுகவும் சரி, டிடிவி தினகரனும் சரி, எத்தனையோ சோதனைகளை கடந்து வந்திருக்கிறோம். எங்களை யாரும் மிரட்ட முடியாது.

எங்களை மரியாதையோடு அணுகி வருகிறார்கள். கட்சி நிர்வாகிகள் விரும்பும் முடிவைத்தான் நான் எடுப்பேன். தலைமை முடிவெடுத்துவிட்டு, அதை தொண்டர்கள் மீது திணிக்கும் கட்சி அல்ல நாங்கள். எத்தனையோ அரசியல் ஜாம்பவான்கள் எல்லாம் சுயநலத்திற்காக வெளியேறிய பிறகும் உயிரோட்டத்தோடு தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது இந்த இயக்கம். 2026 சட்டசபை தேர்தலில் அமமுகவை தவிர்த்து விட்டு எந்த கட்சியும் ஆட்சியில் அமர முடியாது.
அதிமுக உடன் இணைகிறோம் என்றால் அந்தக் கட்சியுடன் ஒன்றிணைவது இல்லை. கூட்டணியில் இருப்பது. தை பிறந்தால் வழி பிறக்கும். ஜெயலலிதா பிறந்தநாளுக்குப் பிறகு எங்கள் கூட்டணி நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படையாக அறிவிப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய டிடிவி தினகரன், "தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் வரும் சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெறுவது கடினம். திமுக ஆட்சியில் செவிலியர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவரும் வீதிக்கு வந்து போராடுகின்றனர்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications