புரட்டாசி 1! காசிமேட்டில் குவிந்த மக்கள்! விக்கித்த வஞ்சிரம்! கொண்டாட்ட கொடுவா! நெத்தியடி நெத்திலி!
சென்னை: புரட்டாசி மாதம் நாளை மறுநாள் தொடங்கும் நிலையில் இன்று அதிகாலையிலேயே காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் மீன் வாங்க அசைவப் பிரியர்கள் குவிந்துவிட்டனர். இன்றைய தினம் மீன்களின் விலையும் குறைந்து விற்பனை செய்யப்பட்டதாக மக்கள் கூறியுள்ளனர்.
பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி நாளை மறுநாள் தொடங்கப்படுகிறது. இந்த மாதத்தையொட்டி அசைவப் பிரியர்கள் மாதம் முடியும் வரை அசைவம் சாப்பிட மாட்டார்கள்.

ஒரு சிலர் சனிக்கிழமை மாவிளக்கு போட்டு பெருமாளுக்கு படைத்த அடுத்த நாள் முதல் சாப்பிடுவார்கள். இது அவரவர் குடும்ப வழக்கப்படி இருக்கும். மார்கழி மாதத்தை விட பெருமாளுக்கு புரட்டாசி மாதம்தான் உகந்தது.
இந்த புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை, நவராத்திரி ஆகியவை கொண்டாடப்படுகிறது. எனவே இந்த மாதம் வழிபாட்டுக்கு உரிய மாதமாகும். வாரந்தோறும் புரட்டாசி மாதம் முடிய பெருமாளுக்கு படையல் இடுவார்கள். சாதம், சாம்பார், வடை, பாயாசம், 5 அல்லது 7 வகையான பொரியல்கள், பழங்கள், நெய், தயிர் ஆகியவற்றை சேர்த்து படையிலிட்டு உண்பார்கள்.
பெரும்பாலும் முதல் சனிக்கிழமை அன்றே மாவிளக்கு போட்டு படையலிடுவார்கள். இல்லாவிட்டால் அடுத்த வாரங்களில் போடுவார்கள். இன்னும் சிலர் புரட்டாசி சனிக்கிழமை முடியும் வரை படையல் போடுவார்கள். வெகு சிலர் எல்லா மாதங்களிலும் வரும் புரட்டாசியில் பெருமாளுக்கு படையல் போடுவார்கள்.
புரட்டாசி மாதங்களில் பெருமாள் கோயில்களில் விசேஷம் இருக்கும். இந்த நிலையில் புரட்டாசி மாதம் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில் இறைச்சி கடைகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அலைமோதுகிறது. அது போல் காசிமேடு துறைமுகத்தில் மக்கள் அதிகம் காணப்பட்டனர்.
மீன் வியாபாரிகள், மொத்த வியாபாரிகள், சில்லறை விற்பனையாளர்கள் என ஏராளமானோர் மீன் வாங்குவதற்காக வந்ததால் இன்று காசிமேட்டில் கூட்டம் அதிகம் இருந்தது. இன்றைய தினம் மீன்களின் விலையும் குறைந்திருந்தது. வஞ்சிரம் கிலோ ரூ 1000, கொடுவா ரூ 900, பால் சுறா ரூ 500, சங்கரா ரூ 600, பாறை ரூ 600, இறால் ரூ 400, நண்டு ரூ 300, நகரை ரூ 300, பண்ணா ரூ 300, கானாங்கத்தை ரூ 300, கடும்பா- ரூ 200, நெத்திலி ரூ 100 என விற்பனை செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications