தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள்- உபி முதல்வர் யோகிக்கு 'அப்படி' ஒரு ஐடியா தந்த வானதி சீனிவாசன்!
வட இந்தியர்களுக்காக உபி அரசு தமிழ்நாட்டில் செய்ய வேண்டிய யோசனைகளை வழங்கி இருக்கிறார் வானதி சீனிவாசன்.
சென்னை: தமிழ்நாட்டில் பணிபுரியும் வட இந்திய தொழிலாளர்கள் விவகாரத்தை முன்வைத்து உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பாஜகவின் அகில இந்திய மகளிர் அணி தலைவரும் தமிழ்நாடு எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் தெரிவித்திருக்கும் ஒரு யோசனை பேசுபொருளாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் தொடர்பான விவகாரம் இன்னமும் ஓயவில்லை. வட இந்தியர்களுக்கு தமிழ்நாட்டில் பாதிப்பு என பாஜகவினர் வதந்தி பரப்பி பற்ற வைத்த தீ இன்னமும் அணையவில்லை. இதனைத் தடுக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வானதி சீனிவாசன், உபி பயணம் தொடர்பாக பதிவிட்டுள்ளதாவது: உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினேன். உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்திற்காக, ஐந்து முறை அங்கு பயணம் மேற்கொண்டேன். மகளிரணி நிர்வாகிகளுடன் இணைந்து மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தேன். சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு இன்று காலை கிடைத்தது. என்னுடன் மகளிரணி தேசிய செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சங்கீதா யாதவும் வந்திருந்தார். நிகழ்ச்சி ஒன்றுக்காக கோரக்பூர் செல்வதற்கு தயாராக இருந்தார். ஆனாலும், எங்களுடன் 45 நிமிடங்கள் உரையாடினார்.
பெண்கள் முன்னேற்றத்திற்காக மாநில அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து எங்களிடம் எடுத்துரைத்தார்.
காவல் துறை, நியாய விலைக் கடைகளில் அதிகளவில் பெண்களை பணியமர்த்தியுள்ளதாக மகிழ்வுடன் குறிப்பிட்டார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு செய்யப்படும் உதவிகள், பெண்களுக்கு வழங்கப்படும் பிங்க் ஸ்கூட்டர், பெண்கள் பாதுகாப்புக்கான சிறப்பு திட்டங்களையும் எடுத்துரைத்தார். பெண்களுக்கான திட்டங்கள் அனைத்தும் இஸ்லாமிய பெண்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதில் தமது அரசு உறுதியுடன் இருப்பதாகவும், அதற்காக சிறப்பு முயற்சிகள் மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார். அந்த முயற்சிகள் வெற்றி அடைந்துள்ளதால், இஸ்லாமிய பெண்களிடம் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறியது மகிழ்ச்சி அளித்தது.

தமிழகத்தில், வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக எழுந்த பிரச்னை தொடர்பாக சில விவரங்களை கேட்டறிந்தார். "தமிழக மக்கள் மிகவும் அன்பானவர்கள். தேசத்தின் மீது பற்று கொண்டவர்கள். அவர்களால் மற்ற மாநிலத் தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை நான் அறிவேன்" என்று எங்களிடம் யோகி ஆதித்யநாத் அவர்கள் கூறினார். தமிழக மக்கள் பற்றிய அவரது மதிப்பீடு எனக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது. தமிழகத்தில் பணியாற்றும் உத்தரப்பிரதேச மாநில தொழிலாளர்களுக்கு, சம்பளப் பிரச்னை, மருத்துவ உதவி, இறப்பு நேர்ந்தால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் போன்ற உதவிகளை செய்ய, சென்னை, கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் உத்தரப்பிரதேச அரசு சார்பில் 'உதவி மையம்' ஏற்படுத்தலாம் என்று நான் யோசனை தெரிவித்தேன். நல்ல யோசனை என்ற பாராட்டு தெரிவித்தவர், இது குறித்து ஆலோசித்து நல்ல முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.
காசி தமிழ்ச் சங்கம் பெரும் வெற்றி பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்கள், அங்கு நடைபெறும் பூஜைகள், சடங்குகளை பின்பற்றும் விதம், மந்திர உச்சரிப்பு ஆகியவை தனித்துவம் வாய்ந்தது என்பதை பெருமையுடன் குறிப்பிட்டார். உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்காக நாடு முழுவதும் இருந்து, மகளிரணி நிர்வாகிகள் வந்து, பல நாட்கள் தங்கி பிரசாரம் செய்ததற்காக பாராட்டு தெரிவித்தார். யோகி ஆதித்யநாத் அவர்களுடனான சந்திப்பு, மன நிறைவளிப்பதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. இவ்வாறு வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications