பாஜகவுக்கு நீங்க ஓட்டு போட்டாலும் உங்களுக்கும் நல்லதே செய்வோம்.. வட மாநிலத்தவரிடையே சேகர்பாபு பேச்சு
சென்னை: சென்னையில் உள்ள வட மாநில மக்களில் அதிகம் பேர் பாஜகவுக்கு ஓட்டுப் போட்டுள்ளார்கள் என்றபோதிலும், உங்களுக்காகவும் திமுக உழைக்கும் என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்று, முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக பொறுப்பேற்று இருப்பவர் சேகர்பாபு.
இந்த தொகுதியில் அதிமுக கூட்டணியில் இவரை எதிர்த்து பாஜக சார்பில் வினோஜ் செல்வம் போட்டியிட்டார்.

கள்ள ஓட்டு குற்றச்சாட்டு
வாக்குபதிவு நடைபெற்ற நாளில் தொகுதிக்கு சம்பந்தமில்லாத வட இந்தியர்கள் பலர் இந்த தொகுதியில் ஓட்டு போட வந்தபோது அங்குள்ள திமுகவினர் அவர்களை பிடித்து விரட்டிவிட்டனர். சிலரை காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த தொகுதிக்கு உட்பட்ட சவுகார்பேட்டை பகுதி, அதிக அளவு வட இந்தியர்கள் நீண்ட காலமாக வசிக்கக்கூடிய பகுதியாகும். இங்கு தான் வட இந்தியர்கள் சிலர் தங்க வைக்கப்பட்டு கள்ள ஓட்டுப்போட கூட்டி வரப்பட்டதாக திமுகவினர் அப்போது குற்றம் சாட்டி இருந்தனர்.

வாக்கு வேட்டையாடிய வினோஜ் செல்வம்
இந்த நிலையில்தான் வாக்கு எண்ணிக்கை நாளின்போது பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம், சில சுற்றுகள் திமுக வேட்பாளர் சேகர்பாபு விட முன்னிலை பெற்று ஆச்சரியம் கொடுத்தார். சென்னை திமுகவின் கோட்டை என்று கருதப்படுகிறது. இந்த தேர்தலிலும் ரிசல்ட் அப்படித்தான் திமுகவுக்கு சாதகமாக வந்தது. சென்னையில் அதிமுகவே சிரமப்படும் நிலையில் பாஜக வேட்பாளர் எப்படி இப்படி ஒரு போட்டி கொடுக்கிறார் என்று பல அரசியல் விமர்சகர்களும் ஆச்சரியப்பட்டு போயினர்.

சேகர்பாபு வெற்றி
இருப்பினும் சேகர்பாபு 59 ஆயிரத்து 317 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வினோஜ் செல்வம் 32 ஆயிரத்து 43 வாக்குகள் பெற்று 2வது இடம் பிடித்தார். இந்த நிலையில்தான் துறைமுகம் தொகுதிக்குட்பட்ட வட இந்திய மக்கள் அமைப்புடன் நடைபெற்ற ஒரு சந்திப்பில் சேகர்பாபு சில கருத்துக்களை முன்வைத்துள்ளார் அவர் என்ன கூறினார் என்று பாருங்கள்.

திராவிட கட்சியால் வளர்ச்சி
கடந்த சட்டசபை தேர்தலில் நீங்கள் எங்களுக்கு அதிகம் வாக்களிக்கவில்லை, 2019ல் வாக்களிக்கவில்லை. இந்த முறையாவது நீங்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று மன்றாடி கைகூப்பி தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தோம். ஆனால் நீங்கள் வசிக்கும் பகுதியில் எங்களுக்கு கிடைத்த வாக்குகள்.. வெளிப்படையாகவே சொல்கிறேன்.. 50 வாக்குகள் தான் எங்களுக்கு கிடைத்தது. பாஜகவுக்கு 300க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்துள்ளன. ஆனால், உங்களில் யாரை கேட்டாலும், உங்களுக்கு தான் நாங்கள் வாக்களித்தோம் என்பீர்கள். முன்பெல்லாம் வாக்குச் சீட்டுகள் இருக்கும் போது மொத்தமாக கலந்து வாக்குகளை எண்ணுவார்கள். அப்போது எந்த பகுதியில் யாருக்கு ஓட்டுப் போட்டார்கள் என்பது தெரியாது. இப்போது கணினி வசதி உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு பொத்தானைத் தட்டினால் போதும் எவ்வளவு ஓட்டுக்கள் எங்கே பதிவாகின என்று வந்துவிடும். குறிப்பிட்ட பகுதியில் எத்தனை ஓட்டுகள் எந்த கட்சிக்கு போனது என்பது தெரிந்துவிடும். இந்த முறை பார்த்தாலும், உங்களுக்காக பணியாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர் சார்ந்த கட்சிக்கு ஓட்டு கிடைக்கவில்லை.

நல்லதே செய்வோம்
அதனால் நாங்கள் உங்களை புறக்கணிக்க மாட்டோம். நீங்கள் எவ்வளவு புறக்கணித்தாலும் உங்களுக்காக பணியாற்றுவதற்குதான் திமுக இருக்கிறது. அதனுடைய நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற திருக்குறள் வரிகள் இருக்கிறது. மிகவும் வலுவான வரிகள். நாங்கள் உங்களுக்கு உங்களது மொழியில் மொழிபெயர்த்து அதை வழங்குகிறோம். இவ்வாறு சேகர்பாபு பேசியுள்ளார். தவறு செய்பவர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும், அவர்களே நாணிப்போகும் அளவுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது இந்த குறளின் அர்த்தமாகும். முன்னதாக, திமுகவுக்கு ஓட்டுப்போடாத வட மாநிலத்தவர்களுக்கு எதிராக சேகர்பாபு பேசியதை போன்ற அர்த்தத்தில் ஏஎன்ஐ செய்தி ஏஜென்சி செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், அந்த செய்தி தவறானது என்பது நிகழ்ச்சியில் சேகர்பாபு பேசிய வீடியோ ஆதாரத்தின் மூலம் உறுதியாகியுள்ளது. ஓட்டு போடாவிட்டாலும் உங்களுக்கு நல்லதுதான் செய்வோம் என்ற தொனி மட்டுமே சேகர் பாபு பேசியதில் இருந்தது வீடியோ ஆதாரங்கள் மூலம் உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications