ஆவடி இரட்டை கொலை வழக்கில் சிக்கிய செல்போன்.. சந்தேகத்தின் பேரில் வடமாநில இளைஞர் கைது
சென்னை: சென்னையை அடுத்த ஆவடி இரட்டை கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருகிறார்கள்.
சென்னையின் புறநகர் பகுதியான ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை அருகே மிட்டனமல்லி காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவம்நாயர். 72 வயதாகும் இவர் சித்த மருத்துவர் ஆவார். மருத்துவர் சிவம்நாயர் தனது வீட்டிலேயே கிளினிக் வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி பிரசன்னகுமாரிக்கு 60 வயது ஆகிறது இவர், மத்திய அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக அவரவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்கள். சிவம்நாயரின் மகனும் சித்த மருத்துவராக உள்ளார். இதனால் சிவம்நாயர், பிரச்ன்னகுமாரி தம்பதி மட்டும் தங்களது வீட்டில் தனியாக வசித்து வந்தார்கள்.
நேற்று இரவு சித்த மருத்துவர் சிவம்நாயர், அவரது மனைவி பிரசன்னாகுமாரி இருவரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டில் பிணமாக கிடந்தார்கள். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.
ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் ஆவடி போலீஸ் துணை கமிஷனர் ஐமன் ஜமால் மற்றும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் நேரில் சென்று பார்த்த போது சிவம்நாயர், அவரது மனைவி பிரசன்னாகுமாரி ஆகிய இருவரும் வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். யாரோ சில மர்மநபர்கள், டாக்டர் மற்றும் அவரது மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது தெரியவந்தது.. இதையடுத்து இருவரது உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து விசாரணையை தொடங்கிய போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் சம்பவ பகுதியை நேரில் ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். முதற்கட்டமாக சிவன் நாயர் வீட்டில் நகைகள் ஏதேனும் கொள்ளை அடைக்கப்பட்டுள்ளதா, கொள்ளை அடிக்கும் நோக்கில் இந்த இரட்டை கொலை நிகழ்ந்துள்ளதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஆவடி மிட்டனமல்லி. பகுதி மத்திய அரசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அதிகமாக வசித்து வரும் பகுதியாகும். இங்கு நடந்துள்ள இரட்டை கொலை அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, இந்த இரட்டை கொலை சம்பவத்தில் வடமாநில நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொலை நடைபெற்ற இடத்தில் கைப்பற்றப்பட்ட செல்போனின் அடிப்படையில் மகேஷ் என்ற அந்த வடமாநில இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் சென்னை வளசரவாக்கத்தில் பணிபுரிந்து வருகிறார். கொலை நடந்த இடத்தில் மகேஸின் செல்போன் எப்படி வந்தது என்கிற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications